மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகளை வைக்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 13) உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி வழங்கச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜனவரி 13) உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பெட்டிக்கடை உரிமம் பெறுபவர்கள், சில நாட்களில் அவற்றை வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி வைத்தியநாதன், “சென்னையில் சாலையோரம் பெட்டிக் கடைகள் வைப்பதற்குக் கண்டிப்பாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கடைக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் வேறு ஒரு இடத்தில் கடைக்கு அனுமதி பெறுவதைத் தடுப்பதற்கு ஆதார் அவசியம். எனவே, சாலையோரம் கடைகளை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பங்கள் மீது ஒரு மாதத்திற்குள் மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகே பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது. பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களைப் பெறவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், வாகனங்களைப் பதிவு செய்யவும், பள்ளி மாணவர்கள் சத்துணவைப் பெறவும், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளைப் பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும், பொதுத் தேர்வுகளை எழுதவும், உரம் வாங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon