மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பொங்கல்: வாழைத் தார் விலை உயர்வு!

பொங்கல்: வாழைத் தார் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சந்தையில் வாழைத் தார்களின் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் கரும்பின் விலை பாதியாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் வாழை உற்பத்தியில் திருச்சி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைக்கு வந்துள்ள வாழைத் தார்களின் விலை உயர்ந்துள்ளது. சென்ற வருடம் தமிழகத்தில் மழை இல்லாததால் வாழைத் தார்களின் வரத்து குறைத்துள்ளது. அதனால் வாழைத் தார், வாழைப் பழம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. திருச்சி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ள நிலையில் தேங்காய் மற்றும் வாழைப் பழத்தின் விலை அதிகரித்துள்ளது. வாழைத் தார் ஒன்று ரூ.750 லிருந்து ரூ.800 வரையிலும், ஒரு சீப்பு வாழைப் பழம் ரூ.60க்கும் விற்கப்படுகிறது.

மஞ்சள் விளைச்சல் அதிகமானதால் வரத்து அதிகரித்து சந்தையில் விலை குறைந்துள்ளது. சென்ற வருடம் ஒரு ஜோடி ரூ.40க்கு விற்பனையான மஞ்சள் கொத்து தற்போது ரூ.20க்கு விற்கப்படுகிறது. கரும்பின் விலையும் குறைந்துள்ளது. 10 கரும்புகளைக் கொண்ட ஒரு கரும்புக் கட்டின் விலை சென்ற ஆண்டில் ரூ.400 ஆக இருந்தது. தற்போது ரூ.200 ஆகக் குறைந்துள்ளது. இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு பூக்களின் வரத்தும் அதிகமானதால் அவற்றின் விலை மிகவும் குறைந்துள்ளது. செவ்வந்தி பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.80லிருந்து ரூ.100 வரை விற்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கிலோ ஒன்று ரூ.120க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.60 ஆகக் குறைந்துள்ளது. விலைச் சரிவால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டபோதும் பொதுமக்கள் அதிகம் வந்து வாங்கிச் செல்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon