மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

தனுஷுக்கு நோட்டீஸ்!

தனுஷுக்கு நோட்டீஸ்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், வயது முதிர்வு காரணமாக தங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க தனுஷுக்கு உத்தரவிடக் கோரியும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மேலூர் கோர்ட்டில் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கோர்ட்டில் பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாக தயாரித்து தனுஷ் தரப்பினர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷை எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த மாதம் கதிரேசன் மனு கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக தனுஷ் தரப்பு மீது வழக்கு தொடரப்போவதாக கதிரேசன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனுஷுக்கு வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளதாக கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon