மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

மகர ஜோதி தரிசனம்!

மகர ஜோதி தரிசனம்!

சபரிமலையில் நாளை (ஜனவரி 14) மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2017 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 31ஆம் அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், நாள்தோறும் சாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நாளை நடைபெறும். ஜோதி வடிவில் ஐயப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். இதனை தரிசிக்க பக்தர்கள் இருமுடி கட்டிக் கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

மகர விளக்கு பூஜையின்போது சாமி ஐயப்பனுக்குத் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அதற்காகத் திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பந்தளம் கொட்டாரத்தில் நேற்று (ஜனவரி 12) தொடங்கியது. சாமியின் நகைகள் வைத்திருக்கும் பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. மதியம் 12 மணி அளவில் சபரிமலை நோக்கி திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. ஆபரணப் பெட்டகம் எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நாளை மதியம் பம்பையைச் சென்றடைகிறது. அங்கிருந்து, திருவாபரணப் பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.20 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 18ஆம் படிக்கு கீழ் பகுதியில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, 18ஆம் படி வழியாக திருவாபரண பெட்டிகளை சன்னிதானத்துக்கு எடுத்து செல்லப்படும். அந்த ஆபரணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர், பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

18ஆம் படி வழியாக திருவாபரணப் பெட்டிகள் எடுத்து செல்லப்படுவதால் நாளை 18ஆம் படி வழியாகச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும். பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 7 மணி அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon