மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

இளங்கோவனை சீரியஸா எடுத்துக்காதீங்க!

இளங்கோவனை சீரியஸா எடுத்துக்காதீங்க!

இளங்கோவன் கூறும் கருத்துக்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு, மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி வெளியிட்ட அறிக்கையில், "அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை அந்தந்த மாநிலத் தலைவர்கள், தங்கள் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பார்கள்" என்று குறிப்பிட்டார். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசரே நீடித்துவருகிறார்.

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று நேற்று தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இன்று (ஜனவரி 13) எதிர்வினையாற்றியுள்ள திருநாவுக்கரசர், "நான் உள்பட பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது பதவிகளில் நீடிப்பார்கள் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தியின் அறிவிப்புப்படி நான்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். கட்சியின் தலைவராகத் தொடர்ந்து என்னுடைய பணிகளைக் கவனிப்பேன்" என்று விளக்கம் அளித்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறும் கருத்துக்களுக்கு நான் எந்த வித பதிலும் கூற விரும்பவில்லை. அவருக்காக நான் அனுதாபப்படுகிறேன். பாவம் அவர் அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் உள்ளார். அடிக்கடி இதுபோல கருத்துக்களை கூறிவருகிறார். அவர் பேச்சை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பாவம் அவரை விட்டுவிடுங்கள். இதனால் கட்சியில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ராகுல் காந்தியை விட காங்கிரஸில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. அவர் கூறுவதையே தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்றும் கூறினார்.

சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து, "சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடைபெறுவது உள்நோக்கத்துடன் கூடியது. அமலாக்கத் துறை சோதனையில் இதுவரை எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோன்ற உள்நோக்கமுடைய ரெய்டுகள் தவிர்க்கப்பட வேண்டும்"என்று கண்டனம் தெரிவித்தார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon