மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

விசாரணை முடிந்த பிறகு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதனை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது. ஆணையத்தின் முன்பு பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 23 அன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலாவிற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். அவர், "விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், யார் குற்றச்சாட்டு தெரிவித்தது என்ற விவரத்தைக் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். விசாரணை ஆணையமும் அந்த தகவல்களை தருவதாக ஜனவரி 8 ஆம் தேதி தெரிவித்திருந்தது.

விசாரணை ஆணையத்தின் முன்பு நேற்று (ஜனவரி 12) ஆஜரான சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், "ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என்றும், விசாரணை முடிந்த பிறகு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்" என்றும் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது.மேலும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது. இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைவரையும் விசாரித்த பின் கடைசியில் குறுக்கு விசாரணை செய்தால் வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகும். இனி வரும் நாட்களில் வேண்டுமானால் விசாரணைக்கு வருபவர்களை குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon