மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

முன்னணி இயக்குநர்களின் படங்களில் சந்தானம்

முன்னணி இயக்குநர்களின் படங்களில் சந்தானம்

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக நடிக்க வருவதும் ஒன்றிரண்டு படங்கள் நடித்துவிட்டு மீண்டும் நகைச்சுவை பாத்திரங்களுக்கே திரும்புவதும் தமிழ் சினிமாவின் பழைய வரலாறு. அதை மாற்றி, முன்வைத்த காலைப் பின்வைக்கப்போவதில்லை என்பதுபோல் களமிறங்கியுள்ள சந்தானம் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா என வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் கதாநாயகனாக நடித்துவருவதுடன் காமெடி பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் தவிர்த்துவருகிறார். அறிமுக இயக்குநர்கள், சந்தானத்துக்கு நெருக்கமான இயக்குநர்கள் மட்டுமல்லாமல் முன்னணி இயக்குநர்களும் அவரைக் கதாநாயகனாக வைத்து இயக்க முன்வருவது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் படம், ‘மன்னவன் வந்தானடி’. ஆதிதி பொஹங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஏஞ்சலினா திரைப்படத்தை இயக்கிவரும் சுசீந்திரன், சுட்டுபிடிக்க உத்தரவு படத்தில் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகளைத் தொடங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தானம் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon