மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பொங்கல் கொண்டாடும் பென்னிகுவிக் வாரிசுகள்!

பொங்கல் கொண்டாடும் பென்னிகுவிக் வாரிசுகள்!

பொங்கல் விழா கொண்டாட தமிழகம் வந்துள்ள பென்னிகுவிக்கின் வாரிசுகளை மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 13) வைகோ வரவேற்றுள்ளார்.

தென் தமிழகத்தில் உயிர் நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையே தனது சொந்த பணத்தை செலவிட்டு ஆங்கில அரசாங்கத்தின் அப்போதைய அதிகாரியான பென்னிகுவிக் கட்டி முடித்தார். இந்த அணை 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையினால் 2.23 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதற்கு நன்றிக்கடனாக தேனி மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக்கின் பிறந்தநாளான ஜனவரி 15 ஆம் தேதியன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பேரன் பேத்திகளான சூசன் பெரோ, சரோன்,டயானா மற்றும் ஷானி ஆகியோர் தேனியில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்துள்ளனர்.

பென்னிகுவிக்கின் பேரன் பேத்திகள் இன்று(ஜனவரி 13) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க தமிழக அரசு சார்பாக எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆனால் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பென்னிகுவிக் பேரன் பேத்திகளின் வருகையால் தேனி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2013 ஆண்டு தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 1.25 கோடி செலவில் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon