மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பொங்காத பொங்கல் படங்கள்!

பொங்காத பொங்கல் படங்கள்!

இராமானுஜம்

பொங்கல் பண்டிகைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வரத் தயாராக இருந்தன. தமிழகத்தில் உள்ள 48% சதவீத தியேட்டர்களில் தானா சேர்ந்த கூட்டம், 30% சதவீத தியேட்டர்களில்ஸ்கெட்ச், 18% சதவீத தியேட்டர்களில் குலேபகாவலி படங்கள் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனால் மற்ற படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமால் தள்ளிப்போய் விட்டன. இறுதியாக தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் நேற்று (ஜனவரி 12) வெளியானது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்துள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

1987இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடித்து இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் கருவை மையமாக வைத்து தமிழுக்கு ஏற்ப புதிய திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு சுமாரான ஓபனிங் இருந்தது. மொக்கை படம் இல்லை. சுமாரான படம் ஒரு தடவை பார்க்கலாம் என்பதே படம் பார்த்தவர்களின் கமெண்டாக இருந்தது. முதல் நாள் தமிழ் நாடு மொத்த வசூல் சுமார் 6 கோடி ரூபாய்.

ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்- தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், வேல ராமமூர்த்தி, மதுமிதா நடித்துள்ள இப்படத்தை மூவிங் ப்ரேம் நிறுவனம் தயாரித்துள்ளது. சிலம்பரசன் நடித்து வெளியான "வாலு" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய் சந்தர் டைரக்டு செய்துள்ளார்.

விக்ரம் நடித்த இருமுகன் படம் 2016 செப்டம்பர் மாதம் வெளி வந்து வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் அதனை பூர்த்தி செய்யவில்லை என்பது தியேட்டரில் படம் பார்த்து வெளியில் வந்த விக்ரம் ரசிகன் கமெண்ட் சொல்லியது. "தலைவர் பழைய கதையில் நடிச்சு சொதப்பிட்டாருடா" பீமா படத்தை வேற மாதிரி எடுத்திருகானுக என்பதே தியேட்டர் வட்டார விமர்சனம். முதல் நாள் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 4.50 கோடி.

குலேபகாவலி படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் டைரக்டு செய்துள்ளார். புதையலை தேடி அலையும் பயணக்கதையாக இந்தப் படம் தயாராகி உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று விமர்சனம் வந்திருக்கிறது. வசூல் மிக மோசமாக உள்ளது. சிங்கம் புலிக்கு இடையில் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகும் எலி கதையானது குலேபகாவலி.

குறைவான தியேட்டர்களில் ரீலீஸ் ஆன இப்படம் பார்க்க வந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. நகரங்களில் மூன்று இலக்கங்களிலும் பிற இடங்களில் இரட்டை இலக்கங்களிலுமே டிக்கட் விற்பனையானது. தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 30 லட்சம் மட்டுமே.

நேற்று வெளியான மூன்று படங்களின் வசூல் ஏற்ற இறக்கங்களை திங்கட்கிழமைக்கு பின்னரே அனுமானிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி முதல் இடத்தில் தானா சேர்ந்த கூட்டம், இரண்டாம் இடத்தில் ஸ்கெட்ச், தொலைதூரத்தில் "குலேபகாவலி" உள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon