மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

ஏர்போர்ட் போல் பஸ்போர்ட்

ஏர்போர்ட் போல் பஸ்போர்ட்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 21கொடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் - பெங்களூரு சாலையின் இரும்பாலை சந்திப்பில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(ஜனவரி 13) அடிக்கல் நாட்டினார்.

இந்த மேம்பாலம் அமைப்பதினால் போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் சேலத்தில் ரூபாய் 103.28 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

"சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் விமான நிலையம் போல் நவீன வசதியுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சென்னையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்படும் இடத்தை மத்திய அதிகாரிகள் பார்வையிட்டு உறுதி செய்வார்கள்" என முதலமைச்சர் இவ்விழாவில் தெரிவித்தார்.

சேலம் வருவதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

மேலும் விமான நிலைய அதிகாரிகள், அங்கு நடந்த உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். இதைதொடர்ந்து, முதலமைச்சர் உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பானையை உடைத்துப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon