மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

தூத்துக்குடியில் பயணிகள் கப்பல் சேவை!

தூத்துக்குடியில் பயணிகள் கப்பல் சேவை!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இப்பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளதாகவும், முதற்கட்டமாக இக்கப்பலை இயக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் கோரி அவர்களுடன் கலந்தாய்வு நடத்திய பின்பே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கப்பல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணி குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள சுற்றுலாத் துறையுடன் தூத்துக்குடி துறைமுகம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை துறைமுக மேலாண்மை ஊழியர்களுடன் கப்பல் சேவையில் ஆர்வம் காட்டும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஆலோசனைக்கு பிறகே கப்பலுக்கான இருக்கையின் அமைப்பு, டிக்கெட் விலை, வழித்தடம் போன்றவற்றை நிர்ணயிக்க முடியும் என்று எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விவேகானந்தர் பாறை முதல் திருவள்ளுவர் சிலை வரை செல்ல மட்டுமே கப்பல் போக்குவரத்துச் சேவை உள்ளது. தூத்துக்குடி - கன்னியாகுமரி கப்பல் சேவை தொடங்கப்பட்டால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon