மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்!

ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்!

கவிஞர் வைரமுத்துவை அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் ஆண்டாள் குறித்த நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு ஆண்டாள் பற்றி உரையாற்றிய கவிஞர் வைரமுத்துவின் பேச்சு சர்ச்சைக்குரிய விதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வைரமுத்து தன் பேச்சு பிறரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாக விளக்கமும் அளித்துள்ளார்.

ஆனால், வைரமுத்துவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்துவை அவதூறு வார்த்தைகளைக்கொண்டு விமர்சனம் செய்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் குவிந்துவருகிறது. ராஜாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், “ஆண்டாளை அவதூறு செய்துவிட்டதாக கவிஞர் வைரமுத்துவின் மீது ஹெச்.ராஜா பழிபோட்டு அநாகரிகமாக பேசிவருகிறார். ஹெச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியைக் கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசி பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது எனத் தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார்.

ஹெச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும். எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon