மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பாதாளத்தில் பாலிவுட்!

பாதாளத்தில் பாலிவுட்!

வருடத்திற்கு அதிகப்படியான படங்களை இயக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களை வெளியிடும் இந்திய சினிமா உலகில் எத்தனை படங்கள் வெற்றிப்படங்களாக அமைகின்றன என கணக்கிட்டால் விரல் விட்டு எண்ணும் நிலையிலே உள்ளது.

தமிழில் ஆண்டுக்கு தோராயமாக இருநூறு படங்கள் வெளிவந்தாலும் சில படங்களே தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கின்றன. தமிழில் தான் இந்த நிலை என்றால் பாலிவுட்டிலும் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியில் வெளியான படங்களின் எண்ணிக்கை 286. ஆனால் இவற்றில் பிரமாண்ட வெற்றி பெற்றவை இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான பாகுபலி 2, டைகர் ஜிண்டா கை ஆகிய இரு படங்கள் மட்டுமே என தி குயின்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

286 படங்களில் 257 படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. மீதமுள்ள 29 படங்கள் வெற்றி, சுமாரான வெற்றி, நஷ்டம் இல்லை என்ற வகையில் வருகின்றன. மொத்த பட்டியலில் 59 படங்கள் டப்பிங் படங்களாகவும், ஒரு அனிமேஷன் படமும், நான்கு அனிமேஷன் டப்பிங் படங்களாகவும், மூன்று ஆங்கில படங்களாகவும் உள்ளன.

கோல்மால் அகைன், பத்ரிநாத் கி துல்கனியா, சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள் என்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ஜாலி எல்எல்பி 2, டாய்லட், ஜுட்வா 2 ஆகிய படங்கள் சுமாராக வெற்றியடைந்த படங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒகே ஜானு, ரங்கூண், காபில் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறவே இல்லை. சல்மான் கான் நடித்த டியூப்லைட், ஷாருக் கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்த ஜாப் ஹாரி மெட் செஜல் ஆகியவை தோல்வியை சந்தித்துள்ளன.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon