மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பத்மாவதி: ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதா?

பத்மாவதி: ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதா?

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் படமான பத்மாவதிக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது பத்மாவதியை ஆபாசமாகச் சித்தரித்துள்ளதாக கூறி தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்தச் சமூகத்தினர் படத்தைத் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மறு தணிக்கை செய்துள்ள படக்குழு வரும் 25 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் மீண்டும் சர்ச்சையை உருவாக்கும் விதமாக கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தானில் பத்மாவதி திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து, தற்போது குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ருபானியும், ‘பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தில் வரும் நடன காட்சிகள் குறித்து ராஜ்புத்ர கிர்னி சேனா நிர்வாகி கூறும் போது, “பத்மாவதி படத்தில் ராணி பத்மினியாக நடித்துள்ள தீபிகா, கூமார் எனும் நடனத்தை ஆடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது ராஜஸ்தானில் திருமணங்களில் ஆடப்படும் நடனம் ஆகும். இந்த நடனத்தை அரச குல பெண்கள் ஆடமாட்டார்கள். ஆனால் ராணிபத்மினி கூமார் நடனம் ஆடுவது போல் காட்டப்படுவது தவறு. மேலும் உடலை மறைத்து ஆட வேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடி இருக்கிறார். இது எங்கள் மனதைப் புண்படுத்துவதுபோல் இருக்கிறது. எப்படியாவது ராணி பத்மினியை அடையத் துடிக்கும் வில்லனான அலாவுதீன் கில்ஜி தனது கனவில் தீபிகாவுடன் நெருக்கமாக ஆடிப்பாடும் படியான பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இதுபோன்ற தவறான காட்சிகளை மக்கள் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்

மேலும், “ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையிலும், சித்தூர் கார் கோட்டையிலும் ராஜபுத்திரர்களிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்தது. அதை தட்டிக் கேட்டபோது எங்களை தகாத முறையில் பேசி அவமதித்ததால் பிரச்சினை உருவானது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்றவர்களையும் முறையாக நடத்தவில்லை. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இப்போதும் அரச குடும்பத்தினருக்கு அதே மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, குவாலியர் அரச குடும்பத்தில் பிறந்து தோல்பூர் அரச குடும்பத்தில் மருமகளாக இருக்கிறார். ஒரு அரச குடும்ப வாரிசு ஆளும் மாநிலத்தில் ஒரு ராணியை எப்படி தவறாக சித்தரிக்கலாம். எனவேதான் எதிர்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon