புதுக்கட்சியா? தினகரன் விளக்கம்!

‘புதிதாகக் கட்சி தொடங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்’ என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (ஜனவரி 12) சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனவரி 31 வரை சசிகலா மவுனவிரதம் இருப்பதால் உறவினர் என்ற முறையில் அவரை நான் சந்தித்தேன். என்னுடன் சி.ஆர்.சரஸ்வதி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். பேப்பரில் எழுதிக் காட்டினோம், அவர் அதற்கு ‘யெஸ்’, ‘நோ’ என்று மட்டும் பதில் எழுதினார்” என்று தெரிவித்தார்.
‘புதுக்கட்சி தொடங்கும் எண்ணம் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பதிலளித்த அவர், “தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் உள்ளனர். 1 கோடியே 40 லட்சம் பேர் எங்களுடன் உள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களோடு சேர அனுமதி கேட்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வோம். இது தொடர்பாக சசிகலாவிடம் அனுமதி கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
‘உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என்ற கேள்விக்கு “சட்டப்பேரவை தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்” என்று பதிலளித்தார்
மேலும், “போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததில் அரசுக்கு எந்த வேலையுமே இல்லை. தொழிற்சங்கத்தினர் மக்கள் சிரமப்படுவதைப் பார்த்து அவர்களாகவே தற்காலிகமாக இந்த வேலைநிறுத்த வாபஸ் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த அரசாங்கம் சுய கவுரவம் பார்த்துக்கொண்டு இடி அமீன் அரசு போல உட்கார்ந்திருக்கிறது” என்றும் விமர்சித்துள்ளார்.