மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

டிஜிட்டலில் களமிறங்கிய அருவி!

டிஜிட்டலில் களமிறங்கிய அருவி!

ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அருவி திரைப்படம் டிஜிட்டல் தளங்களில் வெளியாகியுள்ளது.

ரசிகர்களைக் கவர்வதற்காக என்று கூறிக்கொண்டு பொழுதுபோக்கு அமசங்களை வலிந்து திணித்தே பெரும்பாலான தமிழ்ப் படங்கள் உருவாகின்றன. இருப்பினும் அவ்வப்போது குறைந்த பட்ஜெட்டில் சில நல்ல படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய படங்கள் வரவேற்பு பெறாது; தயாரிப்பார்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் என்ற கற்பிதமும் நிலவுகிறது. அதனால் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி விருதுகள் பெற்று பரவலான கவனம் பெற்றவுடன் திரையரங்குகளில் வெளியிடும்போது பெரும்பாலான மக்களிடம் எளிதாக செல்ல முடிகிறது. இத்தகைய முறையை பின்பற்றி சமீபகாலமாக பல்வேறு படங்கள் வெற்றிபெற்றுள்ளன. அதில் அருவி திரைப்படமும் ஒன்று.

அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்த இந்தப் படம் சமூகப் பிரச்னைகளை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லியது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்தனர்.

அதிதி பாலன் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் இணைந்து இசையமைத்திருந்த இதற்கு ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத் தொகுப்பாளராகப் பணியாற்றியிருந்தார். ஷாங்காய், டெல்லி, மும்பை, பஞ்சாப் மற்றும் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம்பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படம் நேற்று (ஜனவரி 12) முதல் அமேசான், விமியோ, ஆன் டாக்கீஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். திரையரங்குகளைப் போல டிஜிட்டல் தளங்களிலும் படங்கள் வெளியாகும்போது பெரும்பாலான ரசிகர்களைச் சென்றடையவும் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவும் முடியும் என சினிமா ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon