மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

அணியில் இடம்பெற போவது யார்?

அணியில் இடம்பெற போவது யார்?

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்று (ஜனவரி 13) தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதன் தொடர்ச்சியாக செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணத்தால் இனிவரும் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற தகவலைத் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்குப் பதிலாக டுயேன் ஆலிவர் மற்றும் லுங்ஜி நிகிடி ஆகிய இரண்டு வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. அதில் ஒருவர், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.

அதேபோல் இந்திய அணியில் ரஹானே சேர்ப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் அவர் தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்னர் சிறப்பாக விளையாடி உள்ளார் என்பதால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். ஆனால், அணியில் அவர் இடம்பெறுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி செஞ்சூரியன் மைதானம் கேப்டவுன் மைதானத்தைவிட அதிக அளவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெறுவார்களா எனப் போட்டி தொடங்கிய பின்னர்தான் தெரியவரும்.

தென்னாப்பிரிக்க அணி செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை 22 போட்டிகளில் மொத்தமாக விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே, இரண்டாவது டெஸ்ட் இந்திய அணிக்குப் பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon