மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்!

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்!

‘சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 12) தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு வருகிற 17ஆம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை விமான நிலைய வளாகத்தில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி உறியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “சிவகாசி பட்டாசு பிரச்னை தொடர்பாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், “ஜனவரி 22ஆம் தேதி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

தினகரனைப் பற்றிய கேள்விக்கு, “நல்ல நேரத்துல அதைப் பற்றியெல்லாம் ஏன் நினைக்கிறீர்கள்? பொங்கல் நேரத்துல நல்லது சொல்லலாம், நல்லது பேசலாம், நல்லவர்களை நினைக்கலாம்” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon