மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

தமிழகத்தில் 1600 கைதிகள் விடுதலை!

தமிழகத்தில் 1600 கைதிகள் விடுதலை!

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு, 10 ஆண்டுகளுக்குக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் 1600 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் வருகிற ஜனவரி 17ஆம் தேதியும், மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 25ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன.

இவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கைதிகளில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளில் 1900 பேரை விடுதலை செய்யலாம் என்று சிறைத் துறை நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. முடிவில் 1600 கைதிகளை விடுதலை செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2008இல் திமுக ஆட்சியின்போது 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தற்போது 1600 பேர் விடுதலை செய்யப்பட உள்ளார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon