மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

சசிகலா அறையில் குட்கா ஆதாரம்!

சசிகலா அறையில் குட்கா ஆதாரம்!

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் இருக்கும் சசிகலா அறையில் இருந்து குட்கா ஊழல் தொடர்பான கடிதம் கைப்பற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று (ஜனவரி 12) உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை குறிக்கும் வகையில் சில குறிப்புகள் இடம்பெற்றிருந்தது. அந்த குறிப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், அதே ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் 56 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக, மாதவ ராவ் குறித்து வைத்திருந்ததாக, வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறப்பு அலுவலர் மூலம், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியில் ரகசிய கடிதத்தை அன்றைய டிஜிபி அசோக்குமாருக்கு வருமானவரித்துறை அனுப்பியிருந்ததாக கூறியுள்ளது. வருமானவரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை இணைத்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அப்போதைய தமிழக டிஜிபி கடிதம் எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம், கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி போயஸ் கார்டனில், வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது, சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் , "வருமானவரித்துறையின் பிரமாணபத்திரத்தில் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon