மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள் 2

தொகுப்பு: தினேஷ்பாரதி

41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் எழுத்தாளர்களைத் தாண்டி கவிஞர்கள் அநேகம் பேர் உருவெடுக்கின்றனர். நாவல், சிறுகதையைத் தாண்டி கவிதைகளுக்கும் வாசகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்ற கவிதை நூல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

*

யவனிகா ஶ்ரீராம் கவிதைகள்

(யவனிகா ஶ்ரீராம்)

யவனிகாவின் பாடு பொருள்கள் பெரும்பாலும் பிரதிபலிப்பவை உலகமயமாதல் சிதைத்த சிறுகூடுகளின் ஆத்திரமும் அதன்பின் அழுத்தப் பகடியுமே. கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஓர் அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை.

சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்ற பல கவிதை நூல்களின் தொகுப்பு இந்நூல். யவனிகாவுடன் உரையாடுவதும் , காத்திரமான அவரின் உரை வீச்சும், ஒரு பட்டயத்தின் மேல் அமரும் வண்ணத்துப்பூச்சியின் தருணம்... (வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்)

*

இதுவரை

(சி.மணி)

மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே பாலமாகச் செயல்பட்ட சி.மணியின் தொகுப்பு ‘இதுவரை’. இந்தத் தொகுப்பில் 1974இல் வெளியான ’வரும் போகும்’, 1976இல் வெளியான ’ஒளிச்சேர்க்கை’ ஆகிய தொகுப்புகளில் வெளியாகிய கவிதைகளும் இதுவரை வெளியாகாத 57 கவிதைகளும் இடம்பெறுகின்றன. 22 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஅச்சு காண்கிறது. (வெளியீடு: க்ரியா பதிப்பகம்)

*

அகமுகம்

(குட்டி ரேவதி)

எப்போதுமே மற்றெந்தப் பணியையும் விட, கவிதை நூல் கொண்டுவருவதுதான் சிரமமான பணியாக, வாழ்வியலைச் சவாலாக்கும் செயலாக இருந்திருக்கிறது. என்றாலும், கவிதை நூல் கொண்டுவருவதன் மகிழ்ச்சி என்பது தானாக மடிந்துகொள்ளும் நூலின் காகித மூலைகளைப் போன்றது. (வெளியீடு: காஞ்சனை நூலாறு)

*

வெள்ளிவீதி

(சக்தி ஜோதி)

எண்ணெயைக் கொண்டு

எரிவதாக

நீங்கள் நம்பும்

இந்த தீபம்

நிஜத்தில்

அதனை விழுங்கக் காத்திருக்கும்

அந்த இருட்டுக்கு முன்

தோற்றுவிடக் கூடாதே

என்ற

வைராக்கியத்தில்தான்

அதிகமாய் ஒளிர்கிறது.

கடந்த வருடம் சக்தி ஜோதி எழுதியவற்றினின்று தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கியது இத்தொகுப்பு. (வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்)

*

அதன் பிறகும் எஞ்சும்

(தமிழ்நதி)

எழுத்தின் மீதான தீராத காதல்தான் இந்தப் பொருளற்ற வாழ்வில் என்னை நிலைத்திருக்கப் பண்ணுகிறது. ‘எழுத்தும் வாசிப்பும் இனி இல்லை என்று ஒருநாள் வருமெனில் தற்கொலை செய்து கொள்வேன்’ என்பது நாடகத்தனமாகத் தோன்றலாம். ஆனால் எல்லாமும் நாடகமில்லை; எல்லாமும் ஆத்மார்த்தமும் இல்லை. இரு வேறுபட்ட கரைகளுக்கும் இடையில் கலங்கிய நதிபோல ஓடுகிறது வாழ்க்கை.

*

நொதுமலர்க் கன்னி

(மெளனன் யாத்ரிகா)

நிலமும் மொழியும்தான் ஓரினத்தின் முதன்மை அடையாளம். அவற்றைச் செழுமையாக வைத்துக்கொள்வது மானுடக் கடமை. அந்த மனோநிலைக்கு வாசிப்பவரை இந்நூலிலுள்ள கவிதைகள் மடைமாற்றும் என்று நம்புகிறேன்.

பாறைகளுக்கிடையே ஊறிக்கிடக்கும் நீர்த்துளிபோல நம் இதயங்களில் ஈரம் பரவுவதை இக்கவிதைகளை வாசிக்கும்போது உணர்கிறேன். இவ்வுணர்வு எல்லோருக்குமானதாக இருக்கும்பட்சத்தில் இக்கவிதைகள் காலங்கடந்தும் நீர்மையோடிருக்கும். அதற்கான சாத்தியங்கள் இதில் உண்டு. (வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்)

*

கண் அறியாக் காற்று

(சஹானா)

புதிய பிரபஞ்சத் தன்மையைத் தன் கவிதைகளில் கொண்டுவரும் நவீனத் தலைமுறையின் முதல் திறப்பு இந்நூல் எனலாம். தரையிறக்காமல் எப்போதும் இக்கவிதைகளை உடன் சுமக்கலாம். அதிகாலை விழித்ததும் முதல் அனுபவமாக இவர் கவிதைகளை வாசித்து தூக்கம் கலையலாம். மீண்டும் மீண்டும் சிறைகளை உடைத்து, புதிய கவிதை உலகிற்குள் அழைத்துச் செல்லும் நிகழ மறுக்காத அற்புதம், சஹானாவின் கவிதை வெளி. தொகுப்பு: ஆர்.ஆர்.சீனிவாசன், (வெளியீடு: பனிக்குடம் மற்றும் ஆகுதி பதிப்பகம்)

*

சொல் நிலம்

(மகாராசன்)

தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் ரஷ்யக் கவிஞர் ரசூல் கம்சதோவ். அதனால்தான், மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது. (வெளியீடு: ஆதி பதிப்பகம்)

இவை போன்று பல கவிதை நூல்கள் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்றன.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 1

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon