மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா?

எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா?

தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டபேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று (ஜனவரி 12) எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான மாசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது எம்.எல்.ஏக்களுக்கு 100 சதவீத அளவிற்கு ஊதியத்தை உயர்த்த வகை செய்கிறது. அதாவது தற்போது வழங்கப்படும் 55,000 ரூபாயிலிருந்து 1.05 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க முடிவுசெய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா" என்று கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிராக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "எம்.எல்.ஏக்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் ஒப்படைத்து விடுங்கள்" என்று குறிப்பிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு 25,000ரூபாயாக இருந்த சம்பளம் 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.அதன் பிறகு 2009ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டில் 55 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் எம்.எல்.ஏக்களின் மாத ஊதியம் 39,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon