மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

பத்மாவதி: குஜராத்தும் கைவிட்டது!

பத்மாவதி: குஜராத்தும் கைவிட்டது!

பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் திரையிட மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் படமான பத்மாவதிக்கு தணிக்கைத் துறையினர் கிரீன் சிக்னல் கொடுத்தாலும் படத்திற்கான பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை, படம் வெளியாவதில் வலுப்பெற்றது. கர்னி சேனா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், பல மாநிலங்களும் படத்தை வெளியிட தடை விதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு தணிக்கை சான்றிதழ் வழங்குவதிலும் இழுபறி ஆனது.

இதன் காரணமாக படம் மறுதணிக்கைக்கு உள்ளானது. பல்வேறு பிரிவினரைச் சேர்ந்த சிறப்புக் குழுவினருடன் கலந்துரையாடிய தணிக்கை குழுவினர் விவாதத்தின் முடிவில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்கும் படியும், படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையின்போதும் ‘பொறுப்பு துறப்பு’ அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என்று மாற்று மாறும் படக் குழுவுக்கு அறிவுரை வழங்கியது. இதைப் படக் குழுவினர் ஏற்றுக்கொண்டு அனைத்து மாற்றங்களையும் செய்து `யு/ஏ’ சான்றிதழைப் பெற்றனர்.

ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்ததென்று ஜனவரி 25ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக படக் குழுவினர் அறிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளிவந்த பின்னரும் கர்னி சேனா அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ராஜஸ்தானில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜீ அறிவித்தார்.

ஒரு மாநிலத்தில் தான் பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருந்த படக் குழுவினருக்கு மீண்டும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், ‘பத்மாவதி படத்தை எங்கள் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என்று அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ருபானியும், ‘பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பத்மாவதி பிரச்சினை மீண்டும் வலுக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் படக் குழுவினர்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon