மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

காபி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு!

காபி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு!

தொழிலாளர்களின் ஊதிய உயர்வால் காபி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கர்நாடக மாநில காபி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எச்.டி.பிரமோத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எச்.டி. பிரமோத் கூறுகையில், “தற்போதுள்ள தொழிலாளர் ஊதியமான ரூ.277.41 (நாள் ஒன்றுக்கு )புதிய ஊதிய கட்டமைப்பின் மூலம் 10 சதவிகிதம் உயர்வுடன் ரூ.305 ஆகவும் , அதோடு இதர சலுகைகளும் சேர்த்து மொத்த ஊதியம் ரூ.450 லிருந்து ரூ.470 ஆக உயர்த்தப்படும். வட்டி செலவினங்களை விவசாயிகளுக்குக் குறைப்பதன் மூலம் ஊதிய உயர்வுக்கான தாக்கத்தை ஈடு செய்ய அரசு முன்வர வேண்டும். ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை 3 சதவிகிதமாகவும் ரூ. 25 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை 6 சதவிகிதமாகவும் குறைக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்“ என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு குறித்து காபி விவசாயிகளுடனும், தொழிலாளர் அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதுபற்றிய இறுதி அறிவிப்பைக் கர்நாடக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காபி உற்பத்தியின் செலவில் 60 சதவிகிதம் ஊதியத்திற்கும், 35 சதவிகிதம் உரம் மற்றும் எரிபொருளுக்கும் செலவிடப்படுவதாக, ஊதிய உயர்வு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான என்.போஸ் மண்டானா கூறுகிறார். சர்வதேச அளவில் வரலாறு காணாத அளவில் காபி விலை குறைந்து வரும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காபி தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon