மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: நீதிபதிகள் பேட்டி!

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: நீதிபதிகள் பேட்டி!

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கடந்த சில மாதங்களாக அதன் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். செலமேஸ்வர், குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்துவருகிறார். இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில் இருக்கிறார் நீதிபதி செலமேஸ்வர். இன்று (ஜனவரி 12) மதியம் 12 மணியளவில் திடீரென்று நீதிபதி செலமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் என்ற நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ”உச்ச நீதிமன்றத்தைப் பாதுகாக்க நாங்கள் எடுத்த முடிவுகள் தோல்வியடைந்தன. கடந்த சில மாதங்களாக, இந்த அமைப்பில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை. இதே நிலைமை நீடித்தால், இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்காது” என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

மேலும், நீதிபதிகளுக்கு வழக்குகளை கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறினர். ”நீதித்துறையின் மாண்புகள் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றும் பலன் ஏதும் இல்லை” என்று தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்த கேள்விக்கு, “தலைமை நீதிபதி மீது தகுதிநீக்க விசாரணை செய்வது பற்றி நாடுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றனர் நீதிபதிகள். பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில், எந்த உள்நோக்கமும் இல்லையென்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் கேட்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சனம் செய்வதே அவமதிப்பாகக் கருதப்பட்டுவரும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளே அதன் செயல்பாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில், இது நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon