மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

அமைச்சருக்கு லஞ்சம்: திமுக வெளிநடப்பு!

அமைச்சருக்கு லஞ்சம்: திமுக வெளிநடப்பு!

குட்கா விவகாரத்தில் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றது உண்மை என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளதால் அவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குட்கா விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “குட்கா வழக்கு தொடர்பாக வருமான வரித் துறையினர் நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர் .அதில், ‘குட்கா விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ. 56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய டிஜிபியாக இருந்த அசோக்குமாரின் அசல் கோப்புகளும் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

குட்கா விவகாரத்தில் வருமான வரித் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்மையான தகவல்களைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “எனவே, அன்றைய சென்னை கமிஷனரும் தற்போதைய டிஜிபியுமான ராஜேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல், விஜயபாஸ்கரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் முதல்வர் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச முயன்றபோது அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது தொடர்பாகப் பேசக் கூடாது என சபாநாயகர் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon