மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

வைரமுத்துவுக்கு ஆதரவு: என்னப்பா ராசா பிரச்சினை?

வைரமுத்துவுக்கு ஆதரவு: என்னப்பா ராசா பிரச்சினை?

கிட்டத்தட்ட பிரச்சினை முடியும் சமயத்தில் ஒவ்வொருவராக வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கிளம்பியிருக்கின்றனர். ஆண்டாளைத் தரக்குறைவாகப் பேசிவிட்டார் வைரமுத்து என்று கூறி எச்.ராஜா உள்ளிட்ட சில பாஜகவினர் முன்னெடுத்த அநாகரிகமான வழிமுறைகளால் பலரும் கொதிப்படைந்திருக்கின்றனர். பாரதிராஜா வெளியிட்ட அறிக்கைக்கு சினிமா துறையிலிருந்து ஆதரவுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

பாரதிராஜாவின் வீடியோவைப் பகிர்ந்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி என்னப்பா ராசா என்ன உனக்கு பிரச்சினை என்று கிண்டலடித்திருக்கிறார். அதேசமயம் வைரமுத்துவுடன் தொடர்ந்து படங்களில் வேலை செய்துவரும் இயக்குநர் சீனு ராமசாமி “இந்து மதப் பெண் துறவிகள் என்பதுதான் தேவதாசி என்பதற்கான உண்மையான பொருள். தேவதாசி என்ற சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அதை கவிஞர் வைரமுத்து மேற்கோளாகக்கூடக் காட்டி இருக்க வேண்டியது இல்லை. நான் பள்ளிப் பருவத்தில் கோவில்களில் மார்கழி அதிகாலைகளில் தேவாரம்,திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகளில் மாணவனாகப் பாடி இருக்கிறேன். நான் அறிந்த வரை கவிஞர் வைரமுத்துவை தாக்குபவர்களை விட கோதை ஆண்டாளையும், அவரது தமிழையும், ஏனைய பக்தி இலக்கியங்களில் உள்ள தமிழ்ச் சுவையையும் அதிகம் நேசிப்பவர் அவர். அதற்கு உதாரணம் கம்பனில் தொடங்கி தொடர்ந்து அவர் செய்து வரும் பக்தி இலக்கிய கட்டுரைகள்” என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித், “எச்.ராஜாவின் மோசமான வசைப் பேச்சுக்குக் கண்டனம்” என ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon