மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

விஜய் சேதுபதி படங்களை குறிவைக்கும் சன் டிவி!

விஜய் சேதுபதி படங்களை குறிவைக்கும் சன் டிவி!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், உருவாகிவரும் இரு படங்களை சன் டிவி நிறுவனம் அடுத்தடுத்து வாங்கியிருக்கிறது.

விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடி முதன்முறையாக இணைந்திருக்கும் படம் ‘96'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இந்த 3 வேடங்களிலும் தனித்தன்மையை காட்டுவார் என்று படக்குழுவினர் முன்பு தெரிவித்திருந்தனர். இதில் ஒரு கதாபாத்திரத்தில் போட்டோகிராபராக நடிக்கிறார்.

படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. இது குறித்த தகவலையும் த்ரிஷாவின் பக்கத்தில் ரீட்விட் செய்து சன் டிவி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் சேதுபதியின் `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டு `96’ படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon