மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

மதுசூதனன் தியாகி அல்ல!

மதுசூதனன் தியாகி அல்ல!

மதுசூதனன் ஒன்றும் தியாகி அல்ல என்று விமர்சித்துள்ள டிடிவி தினகரன், ஜெயக்குமார் வாக்கு சேகரித்தால் மதுசூதனனுக்கு இந்த வாக்குகள் கூட கிடைத்திருக்காது என்று கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் நேற்று (ஜனவரி 11) செய்தியாளர்களை சந்தித்தபோது,“ ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன் தோல்வியடைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை வேட்பாளராகப் பரிந்துரைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்காக உழைத்துவந்த தியாகியல்ல அவர். அவர் கதறி கேட்டதால் 2011 தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார். பின்னர் மீண்டும் வாய்ப்பை மறுத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும், ஜெயக்குமார் வாக்கு சேகரித்திருந்தால் மதுசூதனனின் நிலை மேலும் மோசமாகப் போயிருக்கும் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார். “ஜெயக்குமாரால் அவரது தெருவுக்குள்ளேயே செல்ல முடியாது. பினாமிகளுடன் சேர்ந்து தங்களின் வாழ்வாதாரத்தை அளித்துவிட்டார் என்று அவர் மீது மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஜெயக்குமார் வாக்கு சேகரிக்காததால் இந்த அளவு வாக்குகள் கிடைத்துள்ளது. அவர் சென்றிருந்தால் இதுவும் கிடைத்திருக்காது” என்று தெரிவித்த தினகரன், துரோகிகளுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

“கடவுளே வாக்கு சேகரித்தாலும் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்காது. 6 ஆயிரம் கொடுத்து திமுக வாக்குகளை அதிமுக திருடிவிட்டது. மதுசூதனன் எங்கள் அணிக்கு வருவதாக இருந்தாலும் நாங்கள் சேர்க்கமாட்டோம். அவரை இணைப்பது என்பது வீண் வேலை” என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon