மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அலங்காநல்லூரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்றது. இறுதியாகத் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. பின்னர் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு அவசர அவசரமான ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டைச் சிறப்பாக கொண்டாட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும்.குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றதாகும். இதனைப் பார்ப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவதுண்டு. தை முதல் நாள் ஜன.14இல் அவனியாபுரத்திலும், ஜன. 15இல் பாலமேடு, ஜன.16இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இதையொட்டி 3 ஊர்களிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காளைகள் நிறுத்தி வைக்கப்படும் தொழு, வாடிவாசல் மற்றும் காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் அமரும் பகுதியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடிவீரர்களுக்கும் காளைகளுக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. இன்று காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படும். அதேபோன்று 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு இன்று முன்பதிவு நடக்கிறது. 13-ம் தேதி காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் 4 அடி உயரம், 3 வயது, 2 பற்கள் இருக்க வேண்டும். காளை உரிமையாளர்கள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதித்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்படும்போது, மேற்படி தகுதிச் சான்று உள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். தகுதிச் சான்று சரிபார்க்கக் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வருமாறு ஜல்லிக்கட்டு கமிட்டியினர் அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னீர்செல்வமும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon