மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

பங்குகளை விற்குமா பதஞ்சலி நிறுவனம்?

பங்குகளை விற்குமா பதஞ்சலி நிறுவனம்?

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தில் ரூ.3,200 கோடி வரையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், நெய், பூஜைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்நாட்டிலேயே ரசாயனக் கலப்பின்றித் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஹிந்துஸ்தான் யூனிலிவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கி வரும் பதஞ்சலி, ஜவுளி, சோலார் உள்ளிட்ட துறைகளிலும் தடம் பதித்துள்ளதோடு, பல்வேறு துறைகளில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

500 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3,200 கோடி) தொகைக்குப் பதஞ்சலியின் பங்குகளை வாங்கும் லூயிஸ் வூட்டன் நிறுவனத்தின் விருப்பத்துக்குப் பதஞ்சலி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனை இல்லை என்றும், அதேநேரம், தங்களது பங்குகளை விற்கத் தாங்கள் தயாராக இல்லை என்றும் பதஞ்சலி நிறுவனத் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதாவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா தீவிரமாக இருப்பதால் நிதியுதவி வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால், தங்களது நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon