மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

வேலைநிறுத்தம் வாபஸ்!

வேலைநிறுத்தம் வாபஸ்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, இன்று காலை முதல் வழக்கம் போல பேருந்துகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணப் பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதுமுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் எட்டாவது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். போக்குவரத்து ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் கவுரவம் பார்க்கவில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தினால் எட்டு நாளாக பேருந்தை நம்பியிருந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தற்காலிக பேருந்து ஓட்டுர்கள் ஒட்டிய பேருந்துகள் பல விபத்துகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு நேற்று ( ஜனவரி 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் தலைமையில் இரு தரப்புக்கும் இடையே நடுநிலையாகப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், 2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கத்தினர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு சவுந்தரராஜன், "2.57 காரணி ஊதிய உயர்வை மத்தியஸ்தரிடம் வலியுறுத்துவோம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம். தற்போது எட்டு நாள்களாக நடந்துவந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை (இன்று) காலை அனைத்துத் தொழிளர்களும் பணிக்குத் திரும்புவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை முதல் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல இயங்கும் என்று கூறப்படுகிறது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon