மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

ஆல்-ரவுண்டராக அசத்தும் அர்ஜுன் டெண்டுல்கர்

ஆல்-ரவுண்டராக அசத்தும் அர்ஜுன் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவில் டான் பிராட்மேன் பெயரில் தொடங்கப்பட்ட மைதானத்தில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. அதில் ஆல்-ரவுண்டராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

கிரிக்கெட்டின் கடவுள் என அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம்காட்டி வந்துள்ளார். சமீபத்தில் மும்பை அணிக்காக உள்ளூர் ஆட்டங்களின் சிறப்பாக விளையாடிய அர்ஜுன், இங்கிலாந்தில் தொடர்ச்சியாகப் பயிற்சி பெற்று வந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜானி ப்ரிஸ்டவ்வைத் தனது வேகப்பந்து வீச்சினால் வலை பயிற்சியின்போது திணறடித்தார்.

ஆறு அடிக்கு மேல் உயரம் கொண்டுள்ள அர்ஜுன் சிறு வயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற ஆசை தன்னுள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அர்ஜுன் 27 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்தது மட்டுமின்றி, நான்கு ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். இதனால் ஆல்-ரவுண்டாக அசத்திவரும் அவர் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது “எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் தற்போது நன்கு உயரமாக வளர்ச்சி அடைந்துள்ளேன். இது எனக்கு வேகப்பந்து வீச உதவியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், “மிட்சல் ஸ்டார்க் மற்றும் பென் ஸ்டோர்க்ஸ் இருவரையும் முன்னுதாரணமாகக்கொண்டே விளையாடி வருகிறேன்” என்றும் தெரிவித்தார். 18 வயதான அர்ஜுன் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாகச் செயல்படுவார் என்று பல்வேறு ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon