மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக் கண்ணாடி!

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக் கண்ணாடி!

உடலை முடக்கிய மனம்

தூக்கத்தை இழந்த கண்கள்; பிறரது உதவியுடன் நடக்க வேண்டும் என்கிற நிலைமை; எந்தக் காரணமும் இல்லாமல் அழுகை; குளிப்பதில்லை, சாப்பிடுவதில்லை, பேசுவதில்லை என்று அரை டஜன் பிரச்னைகளைச் சுமந்து நின்றாள் அந்தப் பதினைந்து வயதுப் பெண். அவளை நாம் பிரீத்தி என்றே அழைப்போம்.

சிறு குழந்தையைப் போல பிரீத்தி மாறிவிட்டதாகப் புலம்பினர் அவளுடைய பெற்றோர். பல் தேய்க்கவும் பால் புகட்டவும் அந்தப் பெண்ணின் தாய் அருகே இருக்க வேண்டியிருந்தது. மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, பிரீத்தி இப்படித்தான் இருந்தாள்.

பிரீத்தியின் அப்பா அறிவுத் திறன் மற்றும் செயல் திறன் குறைவானவர். அதனால் அவர் நிரந்தர வேலை எதற்கும் செல்லவில்லை. அம்மா மட்டும் வேலைக்குச் சென்றுவந்தார். பிரீத்தியின் பெற்றோரைத் தவிர, அந்தக் குடும்பத்தில் அவளது பெரியப்பாவும் தாத்தாவும் இருந்தனர். அனைவரும் பெரியப்பாவின் ஆதரவை மட்டுமே நம்பியிருந்தனர். இது, பிரீத்தியின் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால், அவளது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்போதும் சண்டை நடக்கும்.

இதைச் சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவள் பிரீத்தி. ஆனால், இவளுக்குத் தன் பெரியப்பாவை மிகவும் பிடிக்கும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பெற்றோர் தனியாகச் சென்றபோதும், பிரீத்தி மட்டும் பெரியப்பா வீட்டில் தங்கிவிட்டாள். சுமார் ஆறு மாத காலம் கழித்தே தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறாள்.

இதன் பிறகு, அடிக்கடி தலைவலி வருகிறது என்று அவள் சொல்ல, பொது மருத்துவரிடம் பிரீத்தியை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவளுக்கு உடல் ரீதியான எந்த பாதிப்பும் இல்லை என்று அன்றே தெளிவாகிவிட்டது. அது உளவியல் ரீதியான தலைவலி (Pshychogenic Headache) என்று அப்போது தெரியவந்திருக்கிறது.

மனநலச் சிகிச்சைக்காக பிரீத்தி அழைத்துவரப்பட்டபோது, அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்குள், அவள் மூன்று பள்ளிகளைக் கண்டிருந்தாள். ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை; சரியாகப் படிப்பதில்லை என்று பள்ளி நிர்வாகங்கள் பிரீத்தி மீது குறைகளை அடுக்கின. இதனால், ஒவ்வோர் ஆண்டும் அவளது பெற்றோர் வேறு பள்ளியைத் தேடினார்கள்.

இது தவிர, அதிகமாகப் பொய் சொல்கிறாள்; பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுகிறாள் என்று அவள் மீதான குற்றச்சாட்டுகள் மிக அதிகம். இதன் பிறகு, திடீரென்று ஒருநாள் பிரீத்தி தன்னால் நடக்க முடியவில்லை என்று அழுதிருக்கிறாள். மெல்லத் தவழ ஆரம்பித்தவள், அதன் பின் முற்றிலுமாக முடங்கிப்போனாள். அவள் யாரோடும் பேசவில்லை. சுமார் ஆறு மாத காலம் இந்த நிலைமை நீடித்திருக்கிறது.

பிரீத்தியைச் சோதித்த நரம்பியல் நிபுணர்கள், அவளது உடலில் பிரச்னை இல்லை என்றனர். எம்ஆர்ஐ ஸ்கேனில் எதுவுமில்லை என்று தெரிந்ததும், இது உளவியல் பிரச்னையாக இருக்கலாம் என்று ஒரு மனநல மருத்வமனையைப் பரிந்துரைத்தனர்.

அந்த மருத்துவமனையில் பிரீத்தி பதினைந்து நாள்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் மனநல சிகிச்சையின் மீது நம்பிக்கை இழந்த அவளுடைய பெற்றோர், ஒரு மந்திரவாதியை வீட்டுக்கு வரவழைத்துப் பூஜை செய்திருக்கின்றனர். ஆனாலும், பிரீத்தியிடம் மாற்றம் ஏதுமில்லை. எதுவும் பலனளிக்காமல் போகவே, இறுதியாக பிரீத்தியை மைண்ட் ஸோனுக்கு அழைத்து வந்தனர். முதல் நாளன்று எந்தக் கேள்விக்கும் அவள் பதிலளிக்கவில்லை. அசையவோ, பேசவோ மறுத்ததால், இரண்டாவது நாளன்று அவளுக்கு ஹிப்னாடிசம் எனப்படும் ஆழ்மன சிகிச்சை அளிக்கப்பட்டது.

“ஆச்சரியப்படும் வகையில், ஹிப்னாடிச சிகிச்சையின்போது சரளமாகப் பேசினாள் பிரீத்தி. அதற்கடுத்த நாள் நடக்கத் தொடங்கினாள். அவள் பேசத் தொடங்கியபோது, என் மனதில் செக்ஸ் எண்ணங்கள் நிறைந்து வழிகிறது; இதனால் படிப்பில் நாட்டமில்லை என்றாள். பத்தாம் வகுப்பு படிக்க வேண்டுமென்ற எண்ணம், அவளிடம் சிறிதும் இல்லை” என்கின்றனர் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் சுதா காமராஜ்.

பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகத் தனக்கு வலிகள் இருப்பதாகப் பொய் சொல்லத் தொடங்கியிருக்கிறாள் பிரீத்தி. பள்ளியில் வேலை செய்யும் வாட்ச்மேன், ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என்று புகார் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள். இடைப்பட்ட காலத்தில் வீட்டில் வைத்திருக்கும் பணத்தைத் திருடி பார்க், பீச், மால் என்று சுற்றியிருக்கிறாள். இவளது செல்போன் முழுவதும் ஆபாசமான தகவல்கள் நிறைந்திருப்பதைக் கண்டதும் பெற்றோர் அரண்டு போயிருந்தனர்.

பெற்றோரின் கெடுபிடி அதிகமானதும், கும்பகோணத்தில் இருக்கும் உறவினர்களிடம் செல்வதற்காக ஆட்டோவில் ஏறியிருக்கிறாள். இதைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர், பிரீத்தியை ஒரு காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். இதன் பிறகே, இவளது குடும்பத்தினருக்கு விஷயம் தெரியவருகிறது. எல்லோருடைய கவனமும் இரக்கமும் தன் மீது திரும்ப வேண்டும் என்பதே பிரீத்தியின் எண்ணமாக இருந்திருக்கிறது.

தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் ஊர் சுற்றியிருப்பதாகவும், அவர்களுடன் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் பிரீத்தி சொன்னது, பெண்ணைப் பெற்ற எவரையும் நிலைகுலையச் செய்வது.

“ஏழாம் வகுப்பு படிக்கும்போது முதலாவதாக உடலுறவு கொண்டேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஷாப்பிங் மாலில் பார்த்த முன்பின் தெரியாத ஆணோடு உறவு கொண்டேன். மூன்றாவதாக, பள்ளியில் வேலை செய்பவருடன் உறவு ஏற்பட்டது. அதன்பின், உணவு கொண்டுவரும் நபருடன் பழக்கம் உண்டானது” என்று நீண்டன பிரீத்தியின் வார்த்தைகள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

முன்பின் தெரியாத அந்நியர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெறும் கலாசாரப் பார்வை மட்டும் இதற்குக் காரணமில்லை; அந்த இளம்பெண் விரும்பாத எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்ற பதற்றமும் இதன் பின்னிருக்கிறது.

இதுதவிர, ஆழ்மன சிகிச்சையின்போது ரோகிணி, ஜெயா என்று வெவ்வேறு ஆளுமைகள் போல பேசினாள் பிரீத்தி. பாலியல் துன்புறுத்தலால் கொலையான பெண் போல பேசியபோது, பிரீத்தியின் தாத்தாவைக் கொல்வதற்காகவே அவள் உடலில் புகுந்திருப்பதாகச் சொன்னாள். தொடர்ச்சியான கவுன்சலிங் மூலமாக, இந்தக் குறைபாடு மெதுவாக நின்றுபோனது.

ஆனால், தாத்தா, பக்கத்து வீட்டுக்காரர் போன்றவர்களால் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக பிரீத்தி சொன்னதை, அவளது பெற்றோர் ஏற்கவில்லை. ஒருமுறை தனது தந்தை தவறாக நடந்துகொண்டதாகப் பள்ளி ஆசிரியர்களிடம் அவள் சொல்லியிருந்தது அதன் பின்னரே தெரியவந்தது.

பிரீத்தி செக்ஸை பற்றி மட்டுமே அதிகம் பேசுவதாக அவளது அம்மா கவலைப்பட்டார். வெளிநபர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க, அவள் மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டாள். மருத்துவமனைச் சூழலை உள்வாங்கவே, பிரீத்திக்கு இரண்டு மாத காலமானது. அதன்பின், அவள் படிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள், நோட்டுகள் தரப்பட்டது. வழக்கமான வாழ்க்கைக்குத் தயாரானபிறகு, அவளது பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்து நிலைமை விளக்கப்பட்டது. குறிப்பாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் பிரீத்தியின் யுக்திகள் பற்றியும், அவள்மீது எந்தக் காரணம் கொண்டும் இரக்கம் காட்டக் கூடாது என்றும் பள்ளியில் தெரிவிக்கப்பட்டது.

பிரீத்தி செயலிழந்ததாகக் காட்டிக்கொண்டதன் காரணம், ஹிப்னாடிச சிகிச்சையின்போது தெரியவந்தது. வாய் திறந்து பேசினால், தான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதிருக்கும். நடக்க முடியும் என்பது தெரியவந்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இரண்டு விஷயங்களையும் தவிர்க்கவே, பிரீத்தி சிறு குழந்தை போல இருந்திருக்கிறாள். சிகிச்சை முறையைத் தொடர்ந்து பின்பற்றிய காலத்தில், அவளது நிலைமை சீராகவே இருந்திருக்கிறது.

பிரீத்தி சொன்னதில் எது உண்மை, எது பொய் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், அவள் வெளிப்படையாகப் பேசுவதை கேட்கவோ, அவளை புரிந்துகொள்ளவோ எவரும் முன்வரவில்லை என்பதே இதன் பின்னிருக்கும் உண்மை.

தகவல்: டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon