மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

காளையை அடக்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை!

காளையை அடக்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை!

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் முன்பதிவு செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஆதார் எண்ணைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியானது.

அப்போது, டோக்கன் வாங்க வரும் வீரர்கள் தங்களது ஆதார் எண்ணைக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதுபோன்று, காளைகளின் மருத்துவச் சான்றிதழ், காளையுடன் அதன் உரிமையாளர் இருக்கும் புகைப்படம் மற்றும் உரிமையாளரின் ஆதார் எண்ணைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், சிலர் வீட்டுக்குச் சென்று தங்களது ஆதார் எண்ணை எடுத்துவந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசல் பகுதியில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, ஜல்லிக்கட்டில் பங்கு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை. மேலும், ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என அவர் கூறினார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon