மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

சூர்யா படத்துக்கு நீங்கியது தடை!

சூர்யா படத்துக்கு நீங்கியது தடை!

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் இன்று (ஜனவரி 12) வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிடத் தடை கோரி, ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் சாந்தி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டதாகக் கூறி, தடை கோரிய மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சாந்தி தியாகராஜன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளின் ரீமேக் உரிமையைத் தான் பெற்றுள்ளதாகவும், அவற்றில் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை மட்டும் ஆர்.பி.பி. நிறுவனத்துக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆர்.பி.பி. நிறுவனத்திடம் படத்தை உரிமம் பெற்ற ஞானவேல்ராஜா, ஒரு மொழியில் ரீமேக் செய்துவிட்டு, மற்றொரு மொழியில் மொழிமாற்றம் செய்வதாகத் தெரிவித்தார். தமிழில் தங்கள் பெயருடன் வெளியிட ஆட்சேபனை இல்லை என்றும், தெலுங்கு சப்-டைட்டிலுடன் வேண்டுமானால் தமிழ்ப் பதிப்பை வெளியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், படத்தின் இரு மொழிகளின் ரீமேக் உரிமையைப் பெற்ற தங்களுக்கு அதை வேறு மொழியில் டப்பிங் செய்ய உரிமை உள்ளதாகவும், அதனடிப்படையில்தான் தமிழில் ரீமேக் செய்துவிட்டு அதிலிருந்துதான் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளதாகவும், ‘ஸ்பெஷல் 26’ படத்தை டப்பிங் செய்தால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று (ஜனவரி 11) தன் தீர்ப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon