மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

கீரை வாங்கவும், அதுவும் ஹைபிரிட் இல்லாத கீரைகள் வாங்கவும் இன்றைய அழகிகள் நிறைய பேர் காலை வேளைகளில் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறது.

ஆரோக்கியத்துக்குப் பாதியும் அழகுக்கு மீதியும். ஆம் தோழிகளே...

வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

பழங்களையும் விட்டு வைப்பானேன். வாங்கி வாருங்கள் அப்படியே.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜூஸ் குடித்துவந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்துக் கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.

சில நாள்களுக்கு முன்னர் கூறிய நக பராமரிப்பில் பூந்திக்கொட்டையைப் பற்றி அவ்வளவாகச் சொல்லவில்லை. மறந்தே போனேன்.

பூந்திக் கொட்டையைக் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் ஊறவைத்துத் தேய்த்தால் சோப்பு போன்று நுரைவரும். அந்த நுரையைக்கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும். பிறகு தமக்கேற்றார் போன்ற வடிவங்களில் நகங்களை வடிவமைத்துக்கொள்ளலாம்.

பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும்.

அட, உன்னிப்பாக கவனித்துக் சருமத்தை மென்மையாக்குபவர்கள்கூட உள்ளங்கையை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழைத்து உள்ளங்கைகளில் தடவிவந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

“உடலுக்கு அழகு வலிவு; உதட்டுக்கு அழகு பொலிவு” என்ற கவிதையை உணர்ந்து முகம் பொலிவுடன் காண வெந்தயக்கீரையை உணவில் பயன்படுத்துவோம். முகப்பொலிவுடன் வாழ்வோம்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon