மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

இந்தியாவில் முதலீடு செய்யும் இஸ்ரேல்!

இந்தியாவில் முதலீடு செய்யும் இஸ்ரேல்!

இந்தியாவில் பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரேல் ரூ.436 கோடி முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜெருசீலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “இந்தியாவில் சுற்றுலா, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் ஊக்குவிப்பு போன்றவற்றுக்காக நான்கு ஆண்டுகாலத் திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு இந்த வாரத்தில் இந்தியா வருகை புரியவுள்ளார்” என்றார்.

“கூடுதலாக இந்தியா - இஸ்ரேல் ஆராய்ச்சி மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்பு நிதியாக ரூ.254 கோடி ஐந்தாண்டுத் திட்டத்தில் அளிக்க இருதரப்பிலும் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் கிளாடு கோஹேன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

நான்கு நாள்கள் பயணமாக ஜனவரி 14ஆம் தேதி இந்தியா வருகைபுரியவுள்ள பெஞ்சமின்னுடன் சேர்ந்து 130 தொழிலதிபர்களும் வருகை புரியவுள்ளனர். இவர்களில் 102 பேர் இஸ்ரேல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியாவில் வேளாண்மை, நீர், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யவுள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகிறார். இறுதியாக 2003ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்திருந்தார். இவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்து ஒன்றையும் தலைநகர் டெல்லியில் அளிக்கிறார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon