மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: மசாலா சேமியா பொங்கல்!

கிச்சன் கீர்த்தனா: மசாலா சேமியா பொங்கல்!

பொங்கல் பண்டிகை இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் களைகட்டத் தொடங்கிவிட்டது தமிழகம். கரும்புக்கு க்யூவில் நிற்க யோசனை செய்து இப்போதே ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டனர். எவ்வளவுதான் குக்கரில் சமைத்தாலும் பொங்கலன்று பானையில் சமைத்தே தீர வேண்டும் என்ற அசாத்திய ஆசைகளோடு அதையும் வாங்கிவிட்டனர் இக்கால தம்பதியினர். மகிழ்ச்சி.

சொந்த ஊருக்குக் கிளம்ப அணிவகுத்துச் செல்வதையும் ஆங்காங்கே கூட்ட நெரிசல்களையும் காண முடிகிறது. சரி, அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே வாருங்கள். இன்றைய காலை மெனுவாக மசாலா சேமியா பொங்கல் செய்யலாம்.

தேவையானவை:

சேமியா – ஒரு கப்

தண்ணீர் – 3 கப்

நெய் – 2 மேசைக்கரண்டி

பாசிப்பருப்பு – கால் கப்

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

மல்லி – அரை தேக்கரண்டி

முந்திரி – 8

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 2

சீரகம் – அரை தேக்கரண்டி

மிளகு – 6

பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று

செய்முறை:

முதலில் சேமியாவுடன் பாசிப்பருப்பை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசிலுக்கு வேகவிடவும். பின் காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியைத் லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்

பிறகு நெய்யைச் சூடாக்கி மீதமுள்ள மசாலா பொருள்களைச் சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும். அதன்பின் வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியைச் சேர்த்துக் கிளறவும். பிறகு தாளித்த பொருள்களைச் சேமியாவில் கொட்டி கிளறி சட்னியுடன் பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

‘தூங்கி எழுந்தவுடன் பலரும் விழிப்பது சீலிங் ஃபேனின் முகத்தில்தான்’ என்பது சென்ற தலைமுறைக்கும், ‘வாட்ஸ்அப்பில்தான்’ என்பது இன்றைய தலைமுறையினருக்கும் உறுதியாகிவிட்டது

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon