மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

கோவையில் தொடங்கியது பலூன் திருவிழா!

கோவையில் தொடங்கியது பலூன் திருவிழா!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நான்காம் ஆண்டு சர்வதேச பிரமாண்ட பலூன் திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருகிறார்கள்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்விதமாகக் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த மூன்றாண்டுகளாகச் சர்வதேச வெப்பக்காற்று மூலம் பறக்கும் பலூன் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இந்த வருடம் நான்காவது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று (ஜனவரி 11) தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக முதல் பலூன் நேற்று காலை 7 மணியளவில் வானில் பறக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பலூன்கள் தரையில் இருந்து சுமார் 1,500 அடி உயரத்தில் காற்று வீசும் திசையில் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பறந்து சென்றன.

அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரமாண்ட பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளன.

பலூன்களை இயக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகை தந்துள்ளனர். பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சுற்றுலாத் துறையின் தேசியக் கொடி வடிவிலான பிரமாண்ட பலூன், நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் உள்ள 2.0 பலூன், குழந்தைகள் விரும்பும் ஆங்கிரி பேர்டு பலூன் உள்ளிட்ட பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை, மாலை என்று இரண்டு முறை இந்த பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன. இன்று முதல் பொதுமக்கள் பிரமாண்ட பலூன்களில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். விழாத் திடலில் குறிப்பிட்ட உயரத்தில் வானில் 10 நிமிடங்கள் பலூன்கள் நிலை நிறுத்தப்படும். பலூனில் பறக்கும் பொதுமக்கள் வானில் இருந்தபடியே பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்கலாம். இதற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon