மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

பட்டிமன்றத்தில் பேசும் விஜயகாந்த்

பட்டிமன்றத்தில் பேசும் விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளரும், பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் புகழுக்குக் காரணம் அரசியல் பணியா அல்லது கலைப் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்படவுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களைக் கவர்ந்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்தார். அவருடைய பாணியில் திரைப்படங்களில் நடித்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்மூலமாக சட்டமன்றத்தில் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்தார் என்பது மறக்கவும், மறுக்கவும் முடியாத உண்மை.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சில ஆண்டுகள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த நடிகர் பாக்யராஜ் இன்னும் ஒரு மாதத்தில் நேரடி அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஷால் தன்னுடைய அரசியல் ஆசையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இப்படி நடிகர்கள் பலரும் அரசியலில் நுழைவதால் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கவனமாகியுள்ளார்.

தேமுதிகவிலிருந்து யாரும் நடிகர்கள் புதிதாக தொடங்கவுள்ள கட்சிக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக, பிரேமலதாவும், சுதிஷும் தினந்தோறும் மாவட்டப் பொறுப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு அக்கறையுடன் நலம் விசாரித்துவருகிறார்கள்

மேலும், தேமுதிகவினரையும், விஜயகாந்த் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த வரும் 11ஆம் தேதி சென்னை வேளச்சேரியில், விஜயகாந்த் புகழுக்குக் காரணம் அரசியல் பணியா அல்லது கலைப் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்படவுள்ளது.

கவிஞர் பிறைசூடன் நடுவர் பொறுப்பை ஏற்றுள்ள இந்தப் பட்டிமன்றத்தில், விஜயகாந்த் புகழுக்குக் காரணம் அரசியல் பணிதான் என்னும் அணிக்கு விஜயகாந்த்தே தலைமை ஏற்கிறார். கலைப் பணிதான் காரணம் என்னும் அணிக்கு பிரேமலதா தலைமை ஏற்கிறார்.

விஜயகாந்த்தும், பிரேமலதாவும் எதிரெதிர் அணியில் இருந்து வழிநடத்தவுள்ளதால் பட்டிமன்றத்தில் விவாதம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் தேமுதிகவினர்.

செவ்வாய், 9 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon