மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் - 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் - 2

தொகுப்பு: தினேஷ் பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

கடந்த ஆண்டில் மிக சொற்பமான நாவல்களே வெளியாகின. நாவல் வடிவத்தில் நாம் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் உள்ளது எனும் அளவிற்குப் பேச்சு இருந்தது. ஆனால், இந்த வருடம் நாவல்களுக்கானது என்று சொல்லலாம். மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் புத்தகக் காட்சியை முன்னிட்டு நாவல்களைக் கொண்டுவந்துள்ளனர். அத்தகைய நாவல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெருவலி - சுகுமாரன்

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று உணர்ந்தேன். கருத்தை உணரும் வாய்ப்பை அளித்தது ஜஹனாரா என்ற பெயர். அந்தப் பெயரின் அறிமுகமும் அதையொட்டிய தேடலும் எதிர்பாராமல் நேர்ந்தவை.

இந்தியாவில் பிரதானமான சூஃபி மரபை வலுப்படுத்திய காஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் மாணவி என்று ஸ்தூபி வாசகத்தில் ஜஹனாரா தன்னை அடையாளம் காட்டுகிறாள். அரச போகங்களிலிருந்தும் அதிகார யுத்தங்களிலிருந்தும் விடுபட்டு அந்த மார்க்கத்தில் சேர விரும்பினாள். ஆனால் சிஷ்டிமரபு அன்று பெண்களுக்கு விலக்குக் கற்பித்திருந்தது. எனவே ஜஹனாராவின் விருப்பம் நிறைவேறவில்லை. இந்தத் தகவல்களையும் இமாம் தெரிவித்தார். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோது ஜஹனாரா எனக்குள் உயிர்த்தெழுந்தாள். அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதுவது மட்டுமே அப்போது என் ஆசை. அதற்காக முற்பட்டபோது புரிந்தது; ஜஹனாரா ஒற்றைக் கவிதைக்குள் அடங்குபவள் அல்ல. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

வேனல் - கலாப்ரியா

எப்போதுமே சொந்த ஊருக்குப் போய்விட்டு, இடைகால் ஊருக்குத் திரும்பும்போது, வழக்கமாக அப்பிக்கொள்ளும் சோகத்தோடு, இதுவும் சேர்ந்து மனசு தாங்க முடியாமல் இருந்தது. அது காரணமோ அல்லது தி.க.சி.யின் துடிப்பு, அவர் தொடுகை வழியே எனக்குள் புகுந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. நாவல் எழுதி விடும் எண்ணம் தீவிரப்பட்டது. .

இரண்டு நாள்களில் நிகழ்ந்துவிட்ட அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த மகாலிங்கம், சாம்ராஜ், இளையபாரதி போன்ற நண்பர்கள், எங்கள் வீட்டையும், நாங்கள் ஓடியாடிப் புழங்கிய வளைவுகளையும், தெருவையும், மற்ற இடங்களையும் பார்த்துவிட்டு ஒவ்வொன்றின் பின்னாலுள்ள சில கதைகளை எல்லாம் கேட்ட பின் திரும்பவும் சொன்னார்கள். இதையெல்லாம் நாவலா எழுதுங்க என்று. ஆக, இந்த நாவலின் பிறப்பு தி.க.சியின் இழப்பையொட்டி மீண்டும் நிகழ்ந்தது என்று சொல்லலாம். அதனாலும் இந்த முதல் நாவல் முயற்சியை, திரு.தி.க.சி அவர்களின் நினைவுகளுக்குச் சமர்ப்பிக்கிறேன். (வெளியீடு: சந்தியா பதிப்பகம்)

செம்புலம் - இரா.முருகவேள்

ஆணவக் கொலையொன்றை அடையாளங்காட்டித் தொடங்குகிறது கதை. சமூக வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும் குறிப்பாகப் பெண்களுக்குத் தடையாகக் கிடக்கிற பலவற்றுள்... ஒன்றினது தோலை உரித்துக் கையில் கொடுத்துள்ளார் தோழர் இரா.முருகவேள். அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் மிகவும் கனமானவை. கவனத்தை உலுக்குபவை. ஒரு துளிகூட கற்பனையில்லாத நாவலிது. ஏன் கற்பனை செய்யவேண்டும்? பொய்களுக்குத்தான் புனைந்துரையும் கற்பனையும் தேவை. இங்கோ தேவைக்குமேல் உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. நாவலைப் படியுங்கள். சாதி சிந்திய செம்புலத்து ரத்தம் கால்களில் ஒட்டாமல் கோவை, திருப்பூர் பக்கம் ஒருசுற்றுப் போய் வாருங்கள். (வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்)

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா-கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?. நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. (வெளியீடு: உயிர்மை பதிப்பகம்)

கொமோரா - லஷ்மி சரவணகுமார்

ஒவ்வொரு நாவலும் வாசிக்கிறவர்களுக்குக் கற்றுத்தருவதைவிட எழுதுகிறவர்களுக்குக் கற்றுத்தருவது ஏராளம். இந்த நாவல் அனேகம் கற்றுக் கொடுத்ததோடல்லாமல் மனதளவிலும் சில மாற்றங்களைத் தந்திருக்கிறது. உள்ளிருந்த வெறுப்பை எல்லாம் கொட்டித் தீர்த்தப்பின் இப்பொழுது மனம் இலகுவாகியிருக்கிறது. கொமோரா வெறுப்பைத்தான் பேசுகிறது. உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகலாம், நீங்கள் இதை வெறுக்கலாம். ஆனால் இந்த உண்மைகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் கடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும். (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)

கலிங்கு - தேவகாந்தன்

பிரதானமாக யுத்தம் பற்றிய நினைவுகளே விழுப்புண்களென ஈழத்தமிழ்ச் சமூகத்தைத் தொந்தரவு செய்தபடியிருக்கிறது. சொற்கள் கொண்டளக்க முடியாத நோவுகொண்டழும் சமூகத்தின் உளவியலை, அவர்களது மீண்டெழும் முயற்சிகளை, குற்றவுணர்வின் கண்ணீரை, தோற்றும் துவளாத மனிதர்களை, பிழைத்திருத்தலின் சாகசத்தை 2003-2015 காலப்பகுதியைக் களனாகக் கொண்டிருக்கும் 'கலிங்கு' பேசுகிறது. அதே வேளை இலங்கைத்தீவினைத் சூழ்ந்திறுக்கும் இனத்துவேஷத்தின் மூலவேர் எதுவெனவும் அது விசாரணை செய்கிறது. (வெளியீடு: வடலி பதிப்பகம்)

பார்பி - சரவணன் சந்திரன்

அவன் வாழ்க்கையில் தன் துணையாக தோழியாக அவனுடனேயே பயணிக்க வைக்கிறான் பார்பியை. விளையாட்டில் வெற்றி பெற்று தனக்கு அணிவித்த மெடலை கூட பார்பியின் கழுத்தில் அணிவித்து அழகு பார்க்கிறான். தான் காதலிக்கும் பெண், தன் பார்பி போலவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். அப்படித்தான் ஜாக்குலின் நித்திய குமாரியை சந்திக்கிறான். ஜாக்குலின் நித்திய குமாரி என்பது அவள் பெயராக இருந்தாலும் அவளை பார்பி என்றே குறிப்பிடுகிறான். அவள் மீது அவன் கொண்டிருக்கும் காதல் அவளிடம் தன்னை ஒரு பார்பி பொம்மையாக ஒப்புவிக்கிறான். பார்பியை அவன் அழகுபடுத்திப் பார்த்து விட்டு பின் பூட்டியும் வைப்பது போல் அவள் இவனை செதுக்கவும் செய்கிறாள் சிதைக்கவும் செய்கிறாள். (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)

மூக்குத்தி காசி - புலியூர் முருகேசன்

நாவல் என்பதன் கட்டமைப்பு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டதல்ல, அப்படியேயாயினும் ஏற்க வேண்டியதுமில்லை என்பது புலியூர் முருகேசனின் பார்வையாக இருக்கிறது. அதனால் அவர் சாத்தியமானவரை நெகிழ்த்தியும் உடைத்தும் இதை எழுதிப் பார்த்திருக்கிறார். மூக்குத்தி காசியைக் கதை நெடுகிலும் கூட்டிவரும் அவர் கதையை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் தொடர் புள்ளிகளினூடே நகர்த்தாமல் துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு நாமே ஒரு கதையை தொகுத்துப் பார்த்துக்கொள்ளும்படியாக விட்டுவிடுகிறார். இது ஒருவேளை மூக்குத்தி காசிக்கு அருகாக நம்மை பொருத்திக் கொள்வதற்கென விடப்பட்ட இடைவெளியாகவும் இருக்கலாம். (வெளியீடு: உயிர்மை பதிப்பகம்)

இவை போன்று பல புதிய நாவல்கள் சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெறவுள்ளன.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் 1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 1

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

செவ்வாய் 9 ஜன 2018