மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

தொகுப்பு: தினேஷ் பாரதி

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

கடந்த ஆண்டில் மிகச் சொற்பமான நாவல்களே வெளியாகின. நாவல் வடிவத்தில் நாம் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் உள்ளது எனும் அளவிற்குப் பேச்சு இருந்தது. ஆனால், இந்த வருடம் நாவல்களுக்கானதாக இருக்கிறது. மூத்த மற்றும் இளம் எழுத்தாளர்களும் புத்தகக் காட்சியை முன்னிட்டு நாவல்களைக் கொண்டு வந்துள்ளனர். அத்தகைய நாவல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கொம்மை-பூமணி

கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பிறகு அவர் எழுதிய `அஞ்ஞாடி’ நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்று இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த வருடம் அவருடைய `கொம்மை’ என்ற புதிய நாவல் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவிருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே வாசகர்களிடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. (வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்)

குடியேற்றம்-தோப்பில் முகம்மது மீரான்

தோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ் செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது.

சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா? சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எது? இவற்றின் முரண்களைத் தன் அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலம் இக் ‘குடியேற்றம்.’ (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

செல்லாத பணம் - இமையம்

நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ என்ற படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், சிந்தனையின் வழக்கமான தன்மையைக்கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்தின்’ சிறப்பு. (வெளியீடு: க்ரியா பதிப்பகம்)

பேட்டை -தமிழ்ப் பிரபா

குறிப்பிட்ட நிலப்பரப்பை மையமாகக் கொண்ட கதைகள் அந்த நிலப்பரப்பின் புவியியல், வரலாறு, பண்பாடு, அங்கு சாத்தியப்படும் வாழ்வின் வகைமைகள், காலப்போக்கில் நடைபெறும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தழுவி விரியும்போது படைப்புக்குரிய தன்மையைப் பெறும். சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல், நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று உருமாறிவந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. மனிதர்கள், அவர்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், வசவுகள், மதிப்பீடுகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், மோதல்கள், உறவுகள், பிறழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் ஊடுபாவாய்க் கலந்துள்ளன. (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

பெயல்-சைலபதி

சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதைச் செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன், அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலனின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் காதலி, வறுமையிலும் அன்பும் பாசமுமாக வாழும் இரவுக்காவலனின் குடும்பம்... என்று மிக அழகாக சென்னையில் வாழும் பல்வேறு விதமான மனிதர்களைப் படம்பிடிக்கிறது இந்த நாவல். (வெளியீடு: யாவரும்.காம் பதிப்பகம்)

வலசை - சு.வேணுகோபால்

பசியின் சந்நிதியில் எரியும் சுடர்களில் எதுவுமே திருட்டுச்சுடர் அல்ல. இன்றைக்காக கடன் பெறுவதுமில்லை. நாளைக்காக சேமிப்பதுமில்லை. யாருக்காகவும் ஒப்பந்தம் செய்து கொள்வதுமில்லை. அந்த ஆலயங்களில் இருந்து புறப்படும் ஜீவன்கள் எவற்றிக்கும் பணவெறியும் இல்லை. அந்தக் கணங்களில் வாழ்ந்து திரியும் இவைகளிடம் கலங்கமும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தடைகளும் இல்லை. விண்ணில் சிறகடித்தாலும் மண்ணில் தடதடத்தாலும் தடுப்புகள் இல்லை. விரிந்த வானையும் அகன்ற பூமியையும் தன்னுள்ளே வைத்திருக்கிற உயிர்களுக்கு சிறுமை ஏது? வஞ்சகம் ஏது? சுயநலம் ஏது? சதி ஏது?.......ஞானத்தின் விசித்திரங்கள் இந்த வலசை. (வெளியீடு: தமிழினி பதிப்பகம்)

ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்

ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந்தி, அதில் பங்குகொண்ட பெண்டிர் மற்றும் சுற்றத்தார் மனதுள் நின்று முக்கோணத்தில் பார்க்க முயல்கிறது இப்புனைவுப் பிரதி. ஒருவகையில் இதில் காந்தி மேலும் பொலிவுடன் மகாத்மாவாய் துலங்குகிறார். (வெளியீடு: உயிர்மை பதிப்பகம்)

ஜெப்னா பேக்கரி-முருகவேல்

இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது. தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது. (வெளியீடு: யாவரும். காம் பதிப்பகம்)

(இதன் தொடர்ச்சி காலை 7 மணி பதிப்பில்)

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-2

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

திங்கள் 8 ஜன 2018