மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 2

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன. அவற்றுள் புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளிவரவுள்ள சிறுகதைத் தொகுப்புகள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி – ஜீ முருகன்

தமிழ் இலக்கிய உலகில் ஜீ.முருகனின் புனைவு உலகுக்குத் தனி இடம் இருக்கிறது. ஆனால், எழுத்துலகிலிருந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வரை ஒதுங்கியிருந்து, அதற்குப்பின் எழுத ஆரம்பித்தக்கதைகளின் தொகுப்பு இது. தனி மனதின் புறவுலகுக்கும், அகவுலக்குமான முரண்களை வெளிப்படையாகப் பேசும் முருகனின் கதைகள், சற்றே நடுக்கமுடைய ஒரு குரலோடு சில தத்துவங்களைப் பொருத்திப் பார்க்கிறது. அவை தன் தரிசனங்களை வலிந்து திணிக்காமல் கதையாகவே ஆட்கொள்கிறது. (யாவரும். காம் பதிப்பக வெளியீடு)

தமிழ்மகன் சிறுகதைகள் – தமிழ்மகன்

வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ்மகன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது. அறிவியல், வரலாறு, அரசியல், சமூகம் எனக் கலந்துகட்டிய கதைகளின் அணிவகுப்பு. காலவரிசைப்படி பிரசுரித்திருப்பதின் மூலம் படிப்படியான மாற்றங்களோடு அவருடையச் சிறுகதைகளைப் புரிந்துகொள்ள இது பயன்படும். (உயிர்மை பதிப்பக வெளியீடு)

ஒற்றறிதல் – யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் புனைவெழுத்துகளுக்குச் சில பொதுக்குணங்கள் உண்டு. இந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கப்பட்ட வாசகருக்கு இவை எதிர்பார்ப்புக்கு உரியவை. புதிய வாசகருக்கு இவை எதிர்பாரா விளைவை அளிப்பவை.

யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம் கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்தைய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது. (காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

பான் கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்

அகரமுதல்வனது இந்தத் தொகுப்பிலுள்ள ஒருபாதிக் கதைகள் போரின் உக்கிரத்திலிருந்து வெளிக்கிடப்பட்டும், படாமலும், நைந்துபோனத் தம் வாழ்வின் அவலங்களை எல்லாம் தமக்குள்ளாகப் பூட்டிக்கொண்டு, பழைய அடையாளங்களை தொலைத்தும், துறந்தும், தேவைக்கருதி மறுத்தும் ஒன்றுமற்ற ஏதிலி மனங்களோடு வாழும் ஈழநிலத்தவர்களின் மனவியலையும், உளவியலையும் பேசுகிறது. (கிழக்கு பதிப்பக வெளியீடு)

நந்தலாலா – நந்தன் ஸ்ரீதரன்

மனித உறவுகளின் பல்வேறு நுண்ணிய அடுக்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துவதில் சிக்கலற்ற மொழியில் ரயில் போல் சீராகப் பயணிக்கும் நந்தன் ஸ்ரீதரின் கதைகள், உள்ளங்கையில் ஒரு ஐஸ்கட்டியை வைத்திருப்பதைப் போன்ற உணர்வைத் தருபவை. முதலில் குளிர்ச்சியைத் தந்துவிட்டு மெதுவாக அது கடத்தும் வலியும், அழுத்தமும் மிக வலிமையானது. கட்டி நீராகி வடிந்த பின்னும் எலும்பு வரை அதன் தாக்கம் இருக்கும். (யாவரும். காம் வெளியீடு)

கருப்பி – அருணா ராஜ்

தனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கருப்பி'யின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்துள்ள அருணா ராஜ். இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் வழியே சமகால வாழ்வியல் நிதர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் வெகுஜன வாசகர்கள் தங்களை பொருந்திப் பார்க்கும் வகையில் சித்தரித்துள்ளார். வாசிப்பவர்கள் மிக எளிதாக தங்களது நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளும்படியான சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. ( வாசக சாலை பதிப்பக வெளியீடு)

காயம் – சீராளன் ஜெயந்தன்

ஓர் ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் சீராளனின் சில கதைகள் அதிகாரத்திற்குப் பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனிமனிதன் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தைக் கோருபவை. யதார்த்த தொனியில் ஆரம்பிக்கின்ற அவரது கதைகள், வடிவங்கள் மீதும் கருப்பொருளில் நடத்தும் விசாரணைகளாக மாறும் ஒரு ஓவியனின் பிரத்யேகக் கதையாக மாறும் பயணம். (யாவரும். காம் வெளியீடு)

காட்டிலிருந்து வந்தவன் – சுதாராஜ்

சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுவை. அதனாலேயே அவரையும் அவர் எழுத்தையும் எனக்குப் பிடிக்கிறது. (காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

பேரண்டன் – செங்கான் கார்முகில்

கவிஞராக அறியப்பட்ட செங்கான் கார்முகில் பேரண்டன் என்கிற தனது முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் சிறுகதை ஆசிரியராகவும் இந்தப் புத்தகக் காட்சியின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். தன்னுடைய சொந்தப் பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார்.

இவை போன்று பல எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் இந்தப் புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் 1

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

ஞாயிறு 7 ஜன 2018