மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் -1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள் -1

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன.

2017ஆம் ஆண்டு புத்தகக் காட்சிக்காக சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா அரங்குகள் 22, பொது அரங்குகள் 24 என மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் என பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன. அவற்றுள் புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளிவரவுள்ள சிறுகதைத் தொகுப்புகள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

சதா நினைவுகளில் திளைத்துக்கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை வெற்றி, தோல்வி, இருப்பு, இன்மை என மாறி மாறி புனைவின் விசித்திர விளையாட்டை நிகழ்த்துபவை எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப் புதிரை அவிழ்க்க முயற்சிப்பவை. (தேசாந்திரி பதிப்பக வெளியீடு)

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன் (தொகுப்பு: சுகுமாரன்)

தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. (காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

வெயிலோடு போய் (முதல் சிறுகதை நூல் வரிசை) – ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை. கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்கு தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது? மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம். (காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

கற்பனை கடவுள் – நாச்சியாள் சுகந்தி

முழுக்க முழுக்க தான் எழுதுவதற்கு ஓர் அழுத்தமான சமூகக் காரணம் மட்டுமே இருக்கிறது என உணர்ந்தே தான் எழுத வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். ஒரு குறிப்பிட்ட மண்ணின் அதன் சூழல், அங்கே நிலவும் ஏற்றத்தாழ்வு, சாதிய வன்கொடுமை, பெண்ணின் துயரங்கள், பிரதேச வாழ்மக்களின் உபாதைகள் என பெரும்பாலான கதைகளை ஒரே பின்புலத்தில் பார்க்கையில் அது ஒரு நாவலைப் படிப்பதன் உணர்வையும் தரும். இத்தகைய கதைகள் அதன் களத்தை முன்னிறுத்தியே முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. (யாவரும்.காம் பதிப்பக வெளியீடு)

கண்ணம்மா – ஜீவ கரிகாலன்

யாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்துகொண்ட பின் உணர்ந்தவற்றை எழுதுவதில்தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள்தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால், ஆயுள்தான் மிகக்குறைவு.

பெர்ஃப்யூம் – ரமேஷ் ரக்சன்

ரமேஷ் ரக்சன் – தனது மூன்றாவது தொகுப்பில் எடுத்துக்கொண்டிருப்பது மிகப்பெரிய சவால் எனலாம். மனித வாழ்வியலைப் புரட்டிப் போட்டுவிட்ட இந்த அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களால் மாறிப்போய்விட்ட உறவுநிலை, காமம், வேட்கை, காதல், அழகியல் போன்ற உணர்வுகளைப் பேசும் கதைகள் புறவயப்பட்டும் பேசவில்லை, அகவயப்பட்டு தத்துவம் செய்யவுமில்லை. ஊடாகப் பயணிக்கிறது. எந்த நியாயமும் கற்பிக்காமல் ஒரு தந்திக்கம்பியினை உராய்வதுபோல் உண்மையாக இருக்கக்கூடுமோ என்பது போன்ற வாதங்களை உண்டு பண்ணுகிறது. கதை மாந்தராக வரும் பெண்களிடம் வராத சலனம், வாசிப்பவர்களுக்கு வருகிறது. (யாவரும்.காம் பதிப்பக வெளியீடு)

பனி குல்லா – கவிதைக்காரன் இளங்கோ

மெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற விரும்பிய / விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுகளில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால், அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில், சொற்களை இரைக்காத காட்சிகளை 70MM திரை போல் முழுமையாக நிரப்பாமல், சம்பவங்களைச் சொல்லியும் உரையாடல் வழியாகவும் உளவியல் அடிப்படையைக் களமாகக்கொண்டிருக்கும் இந்தக் கவிதைக்காரனின் கதைகள் இது. (யாவரும்.காம் பதிப்பக வெளியீடு)

வன்னியாச்சி – தாமரைச்செல்வி

‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம்’, ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளை அறுவடை செய்து சிறுகதைத் துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர். போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள், அழிவுகள், பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்திரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது. (காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

(இதன் தொடர்ச்சி மதியம் 1 மணிப் பதிப்பில்)

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

ஞாயிறு 7 ஜன 2018