மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகள்!

சிறப்புக் கட்டுரை: விவசாயிகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகள்!

ர.ரஞ்சிதா

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகள் உயிரிழந்துவருவதாகத் தெரியவந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது அதன் தாக்கத்தால் நான்கு விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மை கண்டறியும் குழு

பூச்சி மருந்து பாதிப்புகளால் இறந்த விவசாயிகளின் வீடுகளுக்கு உண்மை கண்டறியும் குழு ஒன்று நேரில் சென்று மூன்று நாள்கள் ஆய்வு நடத்தியது. வேளாண்மைக்கான கூட்டமைப்புத் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கவிதா குருகண்டியின் தலைமையில், ரமேஷ் கருப்பையா, சரவணன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் இறந்த விவசாயிகளின் வீடுகள், சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள், மருந்து வாங்கிய கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். ஆய்வு மேற்கொள்ளும்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவையும் சந்தித்துப் பேசினார்கள்.

இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் வருமாறு:

இந்த ஆண்டு மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் 33,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சில வகைப் பூச்சிக்கொல்லிகளை விற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தனியார் உரக்கடைகளில் அவை விற்கப்பட்டுவருகின்றன.

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தினாலும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் மகாராஷ்டிராவில் 50 பேர், தமிழகத்தில் 5 பேர், தெலங்கானாவில் 10 பேர் இறந்துள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இதனால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது ஆண்டுக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர். மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு நடத்த வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சாகுபடி செய்ய வீரியம் அதிகமுள்ள பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுவதாகத் தெரிகிறது.

60க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட மோனோ குரோட்டோபாஸ் என்னும் பூச்சிக்கொல்லி மருந்து இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எண்டோ சல்பானைவிடக் கொடியது மோனோ குரோட்டோபாஸ். எண்டோ சல்பானைத் தடை செய்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் மோனோ குரோட்டோபாஸைத் தடைசெய்யவில்லை

பெரம்பலூரில் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு உண்மை கண்டறியும் குழுவினர் கூறியுள்ளனர்.

எப்படி நடந்தது?

பெரம்பலூர், அரியலூர், சேலம், கடலூர் மாவட்டங்களில் மானா வாரிப் பயிரான பருத்தி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு சரியான மழைப் பொழிவு இல்லாமல் மகசூல் குறைந்து போனது. அதனால், இந்த ஆண்டு மழைப் பொழிவு நன்றாக இருப்பதால், கூடுதல் மகசூல் எடுக்க பருத்தி விவசாயிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விதைத்தனர். விவாசாயிகள் எதிர்பார்த்தது போலவே, நான்கு அடியில் வளர வேண்டிய பருத்திச் செடிகள் ஆறு அடிக்கு வளர்ந்தன. செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப விதவிதமான பூச்சிகளும் வந்து பருத்தியைப் பாதித்து மகசூலை நாசம் செய்தன என்று மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில இணைச் செயலாளரான சரவணன் தெரிவிக்கிறார். உண்மை அறியும் குழுவில் இடம்பெற்ற இவர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இதனால், இந்த ஆண்டும் நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்த விவசாயிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தினர். பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் சிலர் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தார்கள். இந்த மருந்துகளை உரிய பாதுகாப்பின்றி பயன்படுத்திய விவசாயிகளில் ஒதியம் செல்வம், சித்தளி ராஜா, பசும்பலூர் அர்ஜுனன், கூத்தூர் ராமலிங்கம் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையை நாடியுள்ளனர் என சரவணன் கூறுகிறார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மின்னம்பலம்.காம் சார்பாகப் பேசினோம். “நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் இறந்துள்ளதாகத்தான் தகவல் வந்தது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் உரிய பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவருகிறோம்” என்கிறார் அவர்.

பருத்திப் பயிர்களில் பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்திப் பாதுகாப்பான முறையில் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் வகையில் 300 விவசாயிகளுக்குப் பாதுகாப்பு உடைகளையும் உபகரணங்களையும் வழங்கினோம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இந்த முகாமில் விளக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கிறார்.

“மரபணு மாற்றப்பட்ட பி.டி ரகப் பருத்தியை முதலில் தடைசெய்ய வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திகளைப் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. இந்தப் பூச்சிகளை கட்டுப்படுத்தப் புதிய மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். ஆனால், நாட்டுப் பருத்தியில் இவ்வளவு தாக்குதல் இல்லை. எனவே, மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடுவதை தடைசெய்ய வேண்டும்” என்கிறார் சமூகச் செயல்பாட்டாளரான ரமேஷ் கருப்பையா. இவரும் உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

மகாராஷ்டிராவிலும், கேரளாவிலும் இதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது அதன் விஷத்தன்மை தாக்கி பலர் இறந்தனர். அம்மாநில அரசு பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் பலவற்றை பூட்டி சீல் வைத்துள்ளது. மருந்துகளின் தரம், ரசாயனச் சேர்க்கையின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் தடை செய்த மருந்துகளை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் ரமேஷ் கருப்பையா கோருகிறார். சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் மற்றும் பாதிக்கப்பட்டோர் நிலையையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

பூச்சிக்கொல்லி: கண்காணிப்பும் கட்டுப்பாடும்

“இந்திய அளவில் இந்தப் பிரச்சினை உள்ளது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை இந்தியாவில் அனுமதித்துள்ளனர். வழக்கத்தைவிடப் பருத்திகளின் வளர்ச்சிக்கும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறும் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்துக்குத் தங்களது ஆய்வுகளின் முடிவுகளை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“மேலும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும். வேளாண்மைத் துறையினரின் பரிந்துரை இல்லாமல் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். மீறி விற்றால், அந்த நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்த ஆய்வை மாவட்டம் முழுவதும் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது உபயோகிக்க வேண்டிய உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்னும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றும் சரவணன் கூறுகிறார்.

“பூச்சிக்கொல்லிகளால் சுவாசக் கோளாறு, மயக்கம், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வீரியம் அதிகமுள்ள மருந்துகளைப் பயிருக்குத் தெளிக்கும்போது, அதை நாம் சுவாசித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் விவசாயிகள் மருந்தைக் கையாள வேண்டாம்” என்று சென்னையைச் சேர்ந்த டாக்டர் சாந்தா எச்சரிக்கிறார்.

“வீரியம் அதிகம் உள்ள மருந்துகளைக் கையாளும்போது மருந்துகளில் குறிப்பிட்டது போன்று பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து அடிக்கும்போது சுவாச உறை, கையுறை போன்றவற்றை அணிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் சாந்தா.

சந்தையில் விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம் குறித்து அரசுத் தரப்பில் கண்காணிப்போ அவற்றின் தன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வோ போதிய அளவில் இல்லாததையே இந்த மரணங்கள் காட்டுகின்றன. பூச்சிக்கொல்லிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் விவசாயிகள் பலருக்குத் தெரியவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லிகளின் தேவை மரபணுப் பயிர்களால் அதிகரித்திருக்கும் விபரீதத்தைச் சமூகச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொடர்ந்த கண்காணிப்பும் விழிப்புணர்வுமே இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வியாழன், 14 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon