மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலை!

கொள்ளையர்களைப் பிடிக்க சென்றபோது மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றின் மேற்கூரையைத் துளையிட்டு, தங்கம், வெள்ளி என 3.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து ராஜமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்த விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சௌத்ரி உள்ளிட்டோர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையர்களின் தலைவனைப் பிடிக்க, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டி உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட குழு கடந்த 8ஆம் தேதி, ராஜஸ்தானுக்கு விரைந்தது. அங்குள்ள பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை உறுதிசெய்துகொண்ட தனிப்படை இன்று (டிசம்பர் 13) அதிகாலையில் குற்றவாளிகளை நெருங்கும்போது தமிழகக் காவல் துறையினருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது நாதுராம் என்ற குற்றவாளி ஆய்வாளர் பெரியபாண்டி, முனிசேகர் இருவரையும் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்துள்ளார். தோள்பட்டையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் முனிசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழக காவல்துறை மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ஜான் சுந்தர், ஆர்பர்ட் வில்சன் உள்ளிட்டோர் உயிரிழந்த பெரியபாண்டியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். .

பாலி மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலைத் தமிழகத்துக்குக் கொண்டுவரவும், கொள்ளையர்களைப் பிடிக்கவும் கூடுதல் அதிகாரிகள் ராஜஸ்தான் விரைந்துள்ளதாகத் தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

கூடுதல் போலீசாரை ராஜஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்று பெரியபாண்டியின் மனைவி பானுரேகா வேதனையுடன் கூறியுள்ளார்.

பெரியபாண்டி, முனிசேகர் இருவரும் 2000 ஆண்டு பேட்ஜைச் சேர்ந்தவர்கள். பெரியபாண்டி கோயம்பத்தூரில் பயிற்சி முடித்தார், முனிசேகர் சென்னை வீராபுரத்தில் பயிற்சி முடித்தவர்.

மரணமடைந்த பெரியபாண்டியின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சாலைபுதூர் மூவிருந்தாளி கிராமம், தற்போது ஆவடி வசந்தம் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பானுரேகா அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இரு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரூபன் லயோலா கல்லூரி பி.எஸ்.சி முதலாம் ஆண்டும், இரண்டாவது மகன் ராகுல் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஆய்வாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியும், குடும்பத்தாருக்கு அரசு வேலையும், ஓய்வு பெரும் காலம்வரையில் மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சமூக வளைதல வாயிலாகக் கோரிக்கை எழுந்துள்ளன. 2000 பேட்ஜ் காவல் ஆய்வாளர்கள்; ஒன்று சேர்ந்து நிதிகொடுக்கும் ஆலோசனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .

புதன், 13 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon