மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ஹாட்ரிக் நாயகர்!

  ஹாட்ரிக் நாயகர்!

தமிழகத்தில் தான் ஜெயித்த சட்டமன்றத் தொகுதியையே திரும்பிப் பார்க்காத எத்தனையோ எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில்... தன்னைத் தோற்கடித்த தொகுதிக்காக ஐந்து வருடங்கள் ஓர் நிழல் சட்டமன்ற உறுப்பினர் போல செயல்பட்டு நிஜ தொண்டனாக மக்கள் பணியாற்றினார் மனித நேயர்.

அந்த உழைப்புதான் 1984 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவரையே சட்டமன்ற வேட்பாளராக நிறுத்த எம் ஜிஆரை தூண்டியது. மீண்டும் அதேபோல பிரசாரம் செய்தார். வீடு வீடாக கதவு கதவாக, முகம் முகமாக பார்த்து ஓட்டு கேட்டார். ஆம் மக்களின் நம்பிக்கையோடு 1984 சட்டமன்றத் தேர்தலில் வென்றார் மனித நேயர்.

1984 சட்டமன்ற தேர்தலில் எப்படி வாக்குகளை மக்களிடம் நேரடியாக சென்று கேட்டாரோ, அதேபோல வெற்றி பெற்றவுடன், வீடு வீடாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். இவை அவர் ஒரு வேட்பாளராக போட்டியிட்ட பொழுது செய்த கடமைகள்.

1984 இறுதியில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் மனித நேயர் வெற்றி பெற்றவுடன், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்பட்டால் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தன்னுடைய பணியினை திட்டமிட்டு பணியாற்றினார். அந்தப் பணிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

ஒரு சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்களை, அவர்களுடைய வீட்டிலேயே சென்று சந்திக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது என்றால் அது மனித நேயர்தான். சட்டமன்ற உறுப்பினராக சென்று மக்களுடைய குறைகள் என்ன என்று கேட்டு, அந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வீடு, வீடாக சென்று மக்கள் குறை கேட்கிறார் என்று அன்றைய செய்தி தாள்களில் மனித நேயருடைய பணிகளை பாராட்டி எழுதினார்கள்.

அப்படி வீடு, வீடாக செல்வதற்கு நேரம் பற்றாக்குறையாக இருந்தது. ஆகவே, இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து ஒரு வட்டத்திற்கு 10 நபர்கள் என்று ஆட்களை நியமனம் செய்தார்.

பொதுமக்கள், தொகுதி சம்பந்தமான குறைகள் எதுவாக இருந்தாலும், அதை நோட்டுப் புத்தகத்தில் குறிப்பிடும்படி ஒரு வேண்டுகோளினை எழுதி, அதில் கையொப்பமிட்டு... அந்த நோட்டுப் புத்தகத்தினை தன்னுடைய பிரதிநிதிகளிடம் அளித்து வீடு, வீடாக எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினேன். மனித நேயரின் பிரதிநிதி நோட்டுப் புத்தகத்தை எடுத்து சென்று ஒவ்வொரு வீட்டிலேயும் என்ன குறை இருக்கிறது என்று கேட்பார். அதை அவர்கள் சொல்லுகின்ற பொழுது, அந்தக் குறைகளை எழுதுவது, அதற்குப் பிறகு அவர்கள் தொலைபேசி இருந்தால், (அப்பொழுதெல்லாம் கைபேசி கிடையாது) அந்தத் தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்வார்கள்.

இப்படி வீடு, வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலேயும் அங்கே என்னென்ன தேவைகள், சின்ன, சின்ன குறைபாடுகள், அரசு மற்றும் மாநகராட்சி பணிகள், குடிநீர் பிரச்சனை என்கிற அடிப்படை தேவைகளைப் பற்றியெல்லாம், பொதுமக்கள் எழுதி தருகின்ற, அந்தப் பொதுமக்களால் எடுத்து சொல்லப்பட்ட அந்தக் குறைபாடுகளையெல்லாம் பதிவு செய்து, அன்றாடம் என்னென்ன குறைபாடுகள் சொல்லப்பட்டன. உடனடியாக தொலைபேசியில் சொல்லி சரி செய்ய வேண்டிய குறைபாடுகள், சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே பேசி சரி செய்யக் கூடிய குறைபாடுகள், சட்டமன்ற உறுப்பினர் கடிதம் எழுதினால் மட்டுமே பிரச்சனை தீரும் என்றால், அந்த சட்டமன்ற உறுப்பினர் லெட்டர் பேடில் டைப் செய்து அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புகின்ற வகையில் நடவடிக்கை என்கிற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அமைச்சர், முதலமைச்சர், அதிகாரிகள் ஆகியோர்களின் கவனத்திற்கும் இந்தப் பிரச்சனைகள் எடுத்து செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டன. இப்படியாக பன்முகத் தன்மையுடன் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு ஒரு தலைமை செயலகத்தில் பணிபுரிவது போன்று, மனித நேயரின் சட்டமன்ற அலுவலகம் அன்றைக்கு பணியாற்றியது.

மனித நேயர் தன் அலுவலகத்தில் பொதுமக்களுக்கென 10 இலவச தட்டச்சு இயந்திரங்களை நிறுவினார். அனைத்து தட்டச்சு பணிகளையும் இலவசமாக செய்து தந்தார். இலவசமாக நகல் எடுக்கும் இயந்திரம் (அப்பொழுது ஒரு நகல் எடுப்பதற்கு 1.50 காசுகள்) நிறுவி மனித நேயரின் அலுவலகத்தில் இலவசமாக நகல்கள் எடுத்துத் தரப்பட்டன. அப்போது இந்த புதிய முறை மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் என்று அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் வழங்கப்பட்டன.

இப்படியாக, மனித நேயர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மக்களுடைய பிரச்சனைகளை எளிமையாக, ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்கிற வகையில், சட்டமன்றத்தில் மக்களுடைய பிரச்சனைகளை கேள்வியாக, கவன ஈர்ப்பு தீர்மானங்களாக, மானியக் கோரிக்கைகள், கேள்வி நேரம், நேரமில்லா நேரம், சட்டமன்றம் கூடுகின்ற போதெல்லாம் எழுப்பினார்.

சட்டமன்றத்திலே தொடர்ந்து மூன்று கூட்டத் தொடர்களிலும் அதிக கேள்விகள் கேட்டவர் என்கிற மனித நேயரின் ஹாட்ரிக் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

சட்டமன்றத்தில் அதிகமான மானியக் கோரிக்கைகளில் பேசியவர். அதிகமான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தவர். ஒரு நாள் தவறாமல் சட்டமன்றத்திற்கு சென்றவர் என்கின்ற இந்த வரலாற்று பதிவினை இதுவரையில் சட்டமன்றத்தில் அதிக நேரம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் என்கிற இந்தப் பதிவினை இதுவரையிலும் யாரும் முறியடிக்கவில்லை.

எம்புட்டு இருக்குது சாதனை இன்னும் பேசலாம்...

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon