மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?

 திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?

மோட்சம் பெறுவதற்கும், நாராயணின் அருளைப் பெறுவதற்கும் நாராயணனை மாத்திரம் நாடினால் போதாது... அவரது பத்தினியான பிராட்டியாரையும் சேர்த்தியாக கைங்கர்யம் செய்தால்தான் தியானித்தால்தான் வேண்டினால்தான் கேட்டது கிடைக்கும் என்று புருஷகாரம் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.

ஆண்டாளின் பாசுரத்தில் இருந்து திராவிட வேதமாம் திருவாய்மொழியில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் வரை புருஷகாரத்துக்கு இலக்கணமாய் வகுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.

ஆண்டாள் தான் கண்ணனை அடைவதற்காக கண்ணனின் முறைப்பெண்ணான நப்பின்னையை வேண்டுகிறாள்.நம்மாழ்வாரோ தன் மகளுக்கான விண்ணப்பமாக திருமாலியிடம் வேண்டும் ஒரு தாய்மொழியாக திருவாய் மொழியில் ஸ்ரீதேவி, பூதேவி, நப்பின்னை என்று முப்பிராட்டிகளின் தாய்மை பரிந்துரையையும் எதிர்நோக்கி எழுதிவிட்டார்.

ஆக... வைணவம் என்பது வாழ்வியலுக்கான கோட்பாடு. அதாவது இறைவனாகவே இருந்தாலும் அவனது மனைவி சொன்னால்தான் நடப்பது சீக்கிரமாக நடக்கும், உறுதியாக நடக்கும் என்றதொரு வாழ்வியல் செய்தியை புருஷகாரம் என்று அருளியிருக்கிறார்கள்.

எப்போதுமே ராமானுஜரின் சிஷ்யர்களுக்கு வைணவக் குறும்பு கொஞ்சம் அதிகம்தான். எம்பெருமானையும், எம்பெருமானாரான ராமானுஜரையும் ஒப்பிட்டு பல லீலா வினோதங்கள் நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒப்பிடுவது கூட அல்ல... வைணவத்தின் ஆச்சாரிய பரம்பரையின்படி எம்பெருமானரை விட எம்பெருமானர் சம்பந்தமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தனர். இதை குருபரம்பரையில் விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளனர்.

ராமானுஜரை அடைந்தால் போதும்... எம்பெருமானை ராமானுஜர் வழியாக அடைந்துவிடலாம் என்பதே இன்று வரைக்கும் வைணவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. திசைகள் மாறினாலும் இந்த சித்தாந்தம் என்றும் வைணவத்தில் மாறப் போவதில்லை.

அந்த வகையில்தான் ராமானுஜரின் சிஷ்யர்கள் யோசித்தார்கள்.

’ஏனப்பா... எம்பெருமானிடம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பிராட்டியாரிடம் வேண்டுகிறோம். பிராட்டியாரின் புருஷகாரம் கிடைத்தால் அதன் மூலம் எம்பெருமான் நம் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறார். இது பக்தர்களுக்கானது.

நாம் எம்பெருமானார் ராமானுஜரின் சீடர்கள். நமக்கு எம்பெருமானை

விட எம்பெருமானாரே முக்கியம். ஆச்சாரியனான எம்பெருமானாரின் அருள் கிடைத்தாலே நமக்கு எம்பெருமானின் அருள் கிடைத்த மாதிரிதான். அப்படியானால் எம்பெருமானார் நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு நாம் யாரை சிபாரிசுக்கு நாடுவது? எம்பெருமானுக்கு பிராட்டி என்றால் எம்பெருமான் கல்யாண குணங்கள் நிறைந்தவன். நமது எம்பெருமானாரோ யதிராஜர். எதிராஜருக்கு ஏது பிராட்டி? யதிராஜரின் கருத்தைக் கவர நாம் யாரை சிபாரிசுக்கு அழைப்பது?’ என்று சீடர்களுக்கு இடையில் விவாதம் போனது.

அட...இது எப்பேற்பட்ட விஷயமாக இருக்கிறது? திருமாலுக்கு தாயார் என்றால் ராமானுஜருக்கு யார்?

பெரிய பிராட்டியார் புருஷகாரமாவதற்கு அவருடைய, க்ருபை, பாரதந்த்ரியம், அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று உயர்ந்த திருக்குணங்களே காரணம் என்பது ஸ்ரீவசனபூஷணம் சொல்லும் செய்தி. அதாவது கருணை,. இரக்கம், பெருந்தன்மை. தாய்மை என்பது யாது என்றால்... திருமாலே முடியாது என்று மறுத்தால் கூட அவரை மாற்றி ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் பிராட்டியின் தாய்மை. குற்றம் புரிந்தவனை கூட ஏற்க வைக்கும் குணம்தான் பிராட்டியின் தாய்மை.

திருமாலுக்கு இப்படி பிராட்டியார் என்றால் ராமானுஜருக்கு யார்? ராமானுஜர் சிலரை வேண்டாம் என்று சொன்னால் கூட... இன்னார் சொன்னால் ராமானுஜர் ஏற்றுக் கொள்வார் என்ற தகுதியுடையவர் யார்?

திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு யார்?

இந்த கேள்விக்கு பதிலறிய காத்திருங்கள்!

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் என்றும் இனிக்கும் பாசுரங்களோடு தனது சிறுவயதில் இருந்தே இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது தமிழ் பற்றும் வைணவப் பற்றும் ஒரே நேர்க்கோட்டில் இணையாக இனிய பயணம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்பயணம் வெல்ல வாழ்த்துவோம்!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon