மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை நேற்று இரவு தொடங்கி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஷால் வேட்புமனுவில் போடப்பட்டிருந்த கையெழுத்து போலியானது என்பதுதான் வேட்புமனு நிராகரிப்புக்கு காரணம். கையெழுத்துப் போட்ட பெண்களை மதுசூதனன் ஆட்கள் மிரட்டியது தொடர்பாக விஷாலுடன் அந்தப் பெண்ணின் கணவர் பேசிய ஆடியோ நேற்று வெளியானது.

மதுசூதனனையும், அதிமுகவையும் இந்த ஆடியோ வெளியானதில் இருந்தே எல்லோரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘விஷாலை கூட எதிர்கொள்ளமுடியாமல் இவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்’ என அதிமுகவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வர ஆரம்பித்துவிட்டன. நேற்று இரவு இந்த ஆடியோ வெளியானதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம். நேற்று இரவே ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு அவர் பேசினாராம். அப்போது, ‘ஜெயிக்கிறோம் தோற்கிறோம் என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டுங்க.. இந்த மாதிரி குறுக்கு வழியில் இறங்கி இப்போ எல்லோரும் விமர்சனம் செய்யுற மாதிரி நடந்துக்கணுமா? நீங்க என்கிட்ட சொன்னதால்தான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி அவருக்கு சீட் கொடுக்க நான் சம்மதிச்சேன். விஷால் போட்டியிட்டால், நாம ஜெயிக்க மாட்டோம்னு யாரு சொன்னாங்களாம்? அப்படியே இருந்தாலும் அதை நம்ம கவனத்துக்கு அவரு கொண்டு வந்திருக்கணும் இல்லையா..

இவரா ஆட்களைவிட்டு ஆட்களை மிரட்டி அடைச்சு வைக்கிறது என்பதெல்லாம் எனக்கு சரியா படவே இல்லை. ஆர்.கே.நகர்ல நாம ஒவ்வொருத்தருமே வேட்பாளர்தான். நம் ஒவ்வொருத்தருக்குமே ஜெயிக்கணும் என்ற அக்கறை இருக்கு. இவரு அதிகப்பிரசிங்கித்தனமா ஏதோ செய்யப் போயி எல்லோருமே தலைகுனிஞ்சு நிற்கிறோம். கால அவகாசம் முடிஞ்சிட்டதால வேற வழியில்லாமல் நான் அமைதியாக இருக்கேன். இல்லைன்னா வேட்பாளரையே மாத்தி இருக்கலாம். எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கு..’ என சொல்லி இருக்கிறார் எடப்பாடி.

அதற்கு பன்னீரோ, ‘எனக்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியாது. அவரு என்கிட்டயும் சொல்லவே இல்ல. நான் விசாரிக்கிறேன். தினகரன் தான் விஷாலை நிறுத்த வெச்சிருக்காரு. தெலுங்கு பேசும் மக்களோட ஓட்டுக்களை பிரிக்கத்தான் இப்படி செஞ்சிருக்காருன்னு என்கிட்ட மதுசூதனன் சொன்னாரு. மத்தபடி இப்படி ஒரு காரியத்துல அவரு இறங்குவாருன்னு எனக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் அது தப்புதான். அவருகிட்ட இது சம்பந்தமாக நான் பேசுறேன். இனி நம்மகிட்ட கேட்காம எந்த வேலையும் ஆர்.கே.நகரில் செய்ய வேண்டாம்னு சொல்லிடுறேன்.’ என்று பதில் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும், எடப்பாடியோ, ‘இப்போ என்ன காரணம் வேண்டுமனாலும் சொல்லிட்டு இருக்கலாம். ஆனால், தப்பு நம்ம ஆளு மேல இருக்கு. அந்த ஆடியோவை நீங்க கேட்டீங்களா... அதுல பேசுற ஆளு தெளிவாக சொல்லிட்டாரு. ஆடியோவை ஆதாரமாக தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், இதனால் நமக்குதான் பின்னடைவு என்பதை மறந்துடக் கூடாது.விஷால் நிற்காமல் போனதால தெலுங்கு பேசுறவங்க எல்லோரும் மதுசூதனனுக்கு ஓட்டுப் போட்டுருவாங்களா? ஆளாளுக்கு இப்படி எதாவது செய்ய வேண்டாம்னு சொல்லுங்க...’ என கோபமாகவே சொன்னதாக சொல்கிறார்கள்’’ என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“இது தொடர்பாக மதுசூதனனிடம் விசாரணை நடந்ததா?” என்ற கேள்வியை கேட்டது ஃபேஸ்புக்.

பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப். “விசாரணை நடக்காமல் இருக்குமா? இரவே மதுசூதனனிடம் பேசி இருக்கிறார் பன்னீர். ‘யாரைக் கேட்டு நீங்க இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க. விஷால் போட்டியிடுவதால நீங்க தோல்வி அடைந்துவிடுவீங்கன்னு நாங்க யாராவது சொன்னோமா... அல்லது நாங்க உங்களை இப்படி செய்ய சொன்னோமா ... இப்போ பாருங்க எல்லோரும் தலை குனிஞ்சு நிற்கிற மாதிரி இருக்கு. விஷாலைப் பார்த்து அதிமுக பயப்படுத்துன்னு வெளியில் அசிங்கமா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்...’ என பன்னீர் கடுகடுப்புடன் பேசினாராம். அதற்கு மதுசூதனன், ‘ எனக்கு தெரியாம நம்ம பசங்க செஞ்சுட்டாங்க. அவங்க செஞ்ச பிறகுதான் என்கிட்ட சொன்னாங்க. நானும் சத்தம் போட்டேன். என்ன செய்ய முடியும்? எல்லோருமே நாம ஜெயிக்கணும் என்பதாலதான் இப்படி செஞ்சுட்டாங்க...’ என்று காரணம் சொன்னாராம்.

‘உங்களை கேட்காமல் உங்க அனுமதி இல்லாமல் இப்படி ஒரு விஷயம் எப்படி நடக்கும்? இதனால உங்களுக்கு மட்டுமல்ல... கட்சிக்குதான் அசிங்கம். அது உங்களுக்குப் புரியுதா? எடப்பாடி எனக்கு போன் போட்டு கண்ணாபின்னான்னு பேசுறாரு. நாங்க சொல்றதை தவிர இனி எதையும் செய்யாதீங்க...’ என சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாராம் பன்னீர்’’ என்று முடிந்தது பதில் மெசேஜ்.

இரண்டு மெசேஜ்களையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 6 டிச 2017

அடுத்ததுchevronRight icon